நாட்டில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வண்ணம் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, சில தளர்வுகளுடன் தற்போது வரை அமலில் உள்ளது. இதனால் அனைத்துத் தொழில்துறை முடங்கியது. இதனால், சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாய் பாதிப்படைந்தது.
இதில் மார்ச் மாதத்தில் 97 ஆயிரத்து 597 கோடி ரூபாயும், ஏப்ரல் மாதத்தில் 32 ஆயிரத்து 172 கோடி ரூபாயும், மே மாதத்தில் 62 ஆயிரத்து 151 கோடி ரூபாயும், ஜூன் மாதத்தில் 90 ஆயிரத்து 917 கோடி ரூபாயும், ஜூலை மாதத்தில் 87ஆயிரத்து 422 கோடி ரூபாயும், ஆகஸ்ட் மாதத்தில் 86 ஆயிரத்து 449 கோடி ரூபாயும், செப்டம்பர் மாதத்தில் 95 ஆயிரத்து 480 கோடி ரூபாயும் வசூலாகியுள்ளது.
முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் ஒரு லட்சத்து ஐந்தாயிரம் கோடி ரூபாய் வசூலானதற்கு பிறகு அக்டோபர் மாதத்தில் ஒரு லட்சத்து ஐந்தாயிரம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. இதன் மூலம் கடந்த எட்டு மாதங்களில் இல்லாத அளவு கடந்த மாதம் (அக்டோபர்) ஜிஎஸ்டி வருவாய் ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது.
இதில் அக்டோபர் 31ஆம் தேதிவரை ஜிஎஸ்டி ரிட்டனை 80 லட்சம் பேர் தாக்கல்செய்துள்ளனர். கடந்த ஆண்டு இதே மாதத்தில் 95 ஆயிரத்து 379 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி வருவாய் வசூலான நிலையில் இந்த ஆண்டு அதைவிட 10 விழுக்காடு கூடுதலாக வசூலாகியுள்ளது.
இது குறித்து நிதிச் செயலர் அஜய் பூஷண் பாண்டே கூறுகையில், “கடந்த சில மாதங்களாக வீழ்ச்சியிலிருந்த வரி வசூல் தற்போது முன்னேறிவருவதை கடந்த மாத (அக்டோபர்) வரி வசூல் காட்டுகிறது” என்றார்.
இதையும் படிங்க....அண்ணாவைப் புறக்கணிக்கும் சிபிஎஸ்இ - டி.ஆர்.பி. ராஜா