டெல்லி: வாகன உதிரி பாகங்கள், ஜவுளி, தொழில்துறை இயந்திரங்கள் மற்றும் தளவாடங்கள் உட்பட 12 துறைகளை அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளது.
இந்தியாவில் தரமானப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுவதால், ஏற்றுமதியில் அது பெரும் நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது. இந்த 12 துறைகளின் மூலம், இந்தியா மட்டுமில்லாமல், உலகளவில் நாம் உயர்வைச் சந்திக்க முடியும்.
இந்த 12 துறைகளான, உணவு பதப்படுத்துதல், இயற்கை வேளாண்மை, இரும்பு, அலுமினியம் மற்றும் செம்பு, வேளாண் ரசாயனங்கள், மின்னணு சாதனங்கள், தொழில்துறை இயந்திரங்கள், மரச் சாமான்கள், தோல் மற்றும் காலணிகள், கார் உதிரி பாகங்கள், ஜவுளி, முகக் கவசங்கள், கிருமி நாசினிகள், செயற்கை சுவாசக் கருவிகள் ஆகிய துறைகள் மூலம் இந்தியாவை உலகளாவிய சந்தைகளுக்கு உயர்த்திச் செல்லும் என்று அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
இந்தத் துறைகளை நன்கு பகுப்பாய்ந்து, அதன் வளர்ச்சியை உறுதிசெய்ய அரசு முடிவுகளை எடுக்கும் என்று கூறிய அவர், ஏற்றுமதி வணிகத்தையும் பெருக்க அரசு முனைப்புடன் இருப்பதாகத் தெரிவித்தார்.