2016ஆம் ஆண்டு மே 1ஆம் தேதி உஜ்வாலா திட்டம் என்ற இலவச எரிவாயு இணைப்புத் திட்டம் தொடங்கப்பட்டது. பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்ப பெண்களை கண்டறிந்து இலவச சமையல் எரிவாயு இணைப்பை வழங்கும் இத்திட்டத்தைத் தீவிரத்துடன் மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது. வரும் 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் எட்டு கோடி பேரை இந்தத் திட்டத்தில் இணைக்க வேண்டும் என மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
இந்நிலையில், ஆறு மாதங்களுக்கு முன்னதாகவே எட்டு கோடி இலக்கை எட்டியுள்ளது இந்தத் திட்டம். வரும் 7ஆம் தேதி மாகாரஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் விழாவில் ஏழைக் குடும்பத்திற்கு இந்த இலக்கு நிறைவேற்றப்படுகிறது.
இத்திட்டத்தில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் 1.46 கோடி பேரும், மேற்கு வங்கத்தில் 88 லட்சம் பேரும், பீகார் மாநிலத்தில் 85 லட்சம் பேரும், மத்தியப் பிரதேச மாநிலத்தில் 71 லட்சம் பேரும், ராஜஸ்தான் மாநிலத்தில் 63 லட்சம் பேரும் பயனடைந்துள்ளனர். மொத்த பயனாளிகளில் 40 சதவிகித்தினர் பட்டியலினத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், புகை மாசுவை தவிர்க்கும் நோக்கில் தொடங்கப்பட்ட இத்திட்டத்தை உலக சுகாதார மையம் பாராட்டியுள்ளது.