ETV Bharat / business

'அரசின் 3 வேளாண்மை சீர்த்திருத்தங்களைவிட நிலச்சீர்த்திருத்தமே முக்கியம்...!' - Contract farming

ஹைதராபாத்: 'அரசு அறிவித்துள்ள மூன்று நடவடிக்கைகளைவிட நிலச்சீர்த்திருத்த நடவடிக்கையைத்தான் நான் பிரதானமாகக் கருதுகிறேன். நிலச்சீர்த்திருத்தத்தை மேற்கொள்ளாமல் கிராமப்புற வேலைவாய்ப்பைப் பெருக்க வழியில்லை' என்கிறார் வெங்கடேஷ் ஆத்ரேயா.

Venkatesh athreya
Venkatesh athreya
author img

By

Published : May 30, 2020, 1:01 PM IST

Updated : Nov 19, 2021, 11:57 AM IST

மத்திய அரசு 'தற்சார்பு இந்தியா திட்டம்' என்ற பெயரில் சுமார் 20 லட்சம் கோடி ரூபாய் அளவிற்குச் சிறப்பு நிதிச்சலுகை அறிவிப்பில், வேளாண்மை மற்றும் ஊரகத் துறை சார்ந்த அறிவிப்புகளும் வெளியாகியுள்ளன. ஆனால் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இந்த அறிவிப்புகள் முக்கியப் பேசுபொருளாக உருவாகியுள்ளன.

காரணம், வேளாண்மைத் துறைக்கு வழக்கமாக வழங்கப்படும் சலுகைகளான கடன், தள்ளுபடி, மானியம் ஆகியவை மட்டும் இல்லாமல் இந்த அறிவிப்புகளில் கொள்கைரீதியான முக்கிய மாற்றங்களை அரசு வெளியிட்டுள்ளது. குறிப்பாக,

  1. அத்தியாவசிய பொருள்கள் சட்டத்திருத்தம்,
  2. வேளாண்மை உற்பத்தி சந்தைக்குழுச் சட்டத் திருத்தம் (Agricultural Produce Market Committee Act). [அதாவது ஒழுங்குமுறை விற்பனை நிலையங்கள் கட்டணம் வசூலிப்பதை ஒழுங்குபடுத்தும் சட்டத்திருத்தம்]
  3. ஒப்பந்த வேளாண்மை (இது சட்டத்திருத்தமல்ல... சீர்த்திருத்தம்)

ஆகியவை பெரும் மாற்றத்திற்கான அறிவிப்புகள் எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாக வேளாண் பொருளாதார வல்லுநர் பேராசிரியர் வெங்கடேஷ் பாலசுந்தரம் ஆத்ரேயாவுடன் நமது ஈடிவி பாரத் நடத்திய சிறப்பு நேர்காணலில் நாம் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் விரிவான விளக்கம் அளித்துள்ளார். நாம் எழுப்பிய கேள்விகளும் அவர் அளித்த பதில்களும் வருமாறு:

கேள்வி: அரசு அறிவித்துள்ள இந்த மூன்று அறிவிப்புகள் விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் ஆக்கப்பூர்வமான மாற்றங்களை ஏற்படுத்துமா?

இந்த மூன்றும் முற்றிலும் புதிதான முன்னெடுப்புகள் அல்ல; இவை அனைத்தும் பல ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டுவருகின்றன. பல இடங்களில் இந்தச் சட்டங்களில் மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. முதலில் இந்த மூன்று அறிவிப்புகள் குறித்தும் நமக்குத் தெளிவான புரிதல் அவசியம். முதலாவதாக, அத்தியாவசிய பொருள்கள் சட்டம் என்பது மிக முக்கியமான பண்டங்களை தனியார் பெரு வியாபாரிகள், நிறுவனங்கள் பதுக்கிவைப்பதைத் தடுக்கவே உருவாக்கப்பட்டது. இது போர்க்காலத்தில் உருவாக்கப்பட்ட சட்டம். தற்போதைய சூழலுக்கு இது தேவையில்லை என்று பலர் கூறுகின்றனர். இதிலிருந்து நான் மாறுபடுகிறேன்.

காரணம், இந்தியா போன்ற நாடுகளில் தேவைக்கும், உற்பத்திக்கும் இடையே மெல்லிய இடைவெளிதான் உள்ளது என்பதால் தேவையில் சிறிய மாற்றம் ஏற்பட்டாலும் விலைவாசியில் அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிடும். அதேபோல், நுகர்வோர் என்கிறபோது அதில் விவசாயிகளும் அடங்குவார்கள். விவசாயிகள் தங்களின் உற்பத்திப் பொருள்களைச் சந்தையில் விற்று, தனது தேவைக்கேற்ப பின்னர் நுகர்வு செய்கின்றனர். எனவே, இந்த விலைவாசியின் தாக்கம் அவர்களையும் பாதிக்கும்.

கேள்வி: 1950, 60-களில் இந்தச் சட்டம் உருவாக்கப்பட்டபோது இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெறாமல் இருந்தது. உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற இந்தச் சூழலில், சட்டத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டியது அவசியம்தானே?

இதுபோன்ற கோரிக்கைகள் விவசாயிகளிடமிருந்து வருவதில்லை. தனியார் பன்னாட்டுப் பெருநிறுவனங்கள் சார்பில்தான் இதுபோன்ற கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. தற்போது இந்தியா உணவுத் தன்னிறைவு பெற்று சுமார் 7 கோடி டன் தானியம் எஃப்.சி.ஐ.இல் அதாவது இந்திய உணவுக் கழகத்தில், உள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்குக் காரணம், மக்களின் வாழ்வாதாரத்துக்கு ஏற்றவாறு எளிய மக்களுக்கு பொது விநியோகத் திட்டத்தை செயல்படுத்தவே அரசு உணவு தானியங்களைக் கொள்முதல் செய்யும் முறையை உருவாக்கியதே ஆகும்.

2008, 2010ஆம் ஆண்டுகளில் நகர்ப்புற, கிராமப்புற உணவுப் பாதுகாப்பின்மை குறித்த ஆய்வு ஒன்றை நடத்தி அது தொடர்பாக இரு புத்தகங்கள் எழுதி ஐ.நா. சபையின் WSP திட்டத்தின்கீழ் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வின்போது நாங்கள் உணர்ந்த விஷயம் என்னவென்றால், இந்த இலக்குசார் பொது விநியோகமுறை என்பது ஏழை மக்களின் வாங்கும் திறனைக் கணக்கில் கொள்ளாமல் நிலையை மேலும் சிக்கலாக்கியுள்ளது. உதாரணமாக ஆந்திராவை அரிசி உற்பத்தியில் உபரி மாநிலமாகக் கூறுவோம். அதற்காக ஆந்திரப் பிரதேசத்தில் அனைவரும் உணவில் தன்னிறைவு பெற்றுவிட்டதாகப் பொருள் அல்ல.

எனவே, கிடங்கில் உணவு தானியம் குவிந்துள்ளது மக்களுக்கான பொது விநியோகம் முறையாகச் சென்று சேரவில்லை என்பதைக் குறிக்குமே தவிர உணவு உற்பத்தியில் முழுமையாகத் தன்னிறைவு பெற்றதாகக் கருதிவிடக் கூடாது. மேலும், வேளாண்மை என்பது பருவநிலை சார்ந்து இயங்கக்கூடியது என்பதால் இதில் உள்ள நிலையற்றத் தன்மையை நாம் மறந்துவிடக் கூடாது. பருவநிலை மாற்றம் காலத்தில் ஒரு டிகிரி வெப்பம் அதிகரிப்பதாலும் உற்பத்தியில் குறைவு ஏற்படும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். உணவு போன்ற அத்தியாவசிய விஷயத்தில் தன்னிறைவு பெற்றுவிட்டோம் என்று கருதும் அலட்சியப்போக்கு ஆபத்தானது. எனவே, அத்தியாவசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தை காலாவதியானது எனப் புறக்கணிப்பது முறையல்ல.

கேள்வி: விவசாயிகள் தங்கள் உற்பத்திப் பொருள்களை உரிய விலையில் நாடு முழுவதும் சந்தைப்படுத்தும்விதமாக வேளாண்மை உற்பத்தி சந்தைக்குழுச் சட்டம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்?

வேளாண்மை உற்பத்தி சந்தைக்குழுச் சட்டம் மாநிலங்களுக்குக் கீழ் வருகிறது என்பதால் ஏற்கனவே தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் இந்தச் சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், பிகார் போன்ற மாநிலங்களில் வேளாண்மை உற்பத்தி சந்தைக்குழுச் சட்டம் என்பதே இல்லை. எனவே, அங்கெல்லாம் விவசாயிகளின் பொருள்கள் முறையாகச் சந்தைப்படுத்தப்பட்டு உரிய விலை கிடைத்துவிட்டதா என்ன? சிக்கல் என்பது வேளாண்மை உற்பத்தி சந்தைக்குழுச் சட்டத்தில் மட்டும் இல்லை.

மேலும், நாட்டின் வேளாண்மைத் துறை என்பது மாநிலத்திற்கு மாநிலம் வேறுபட்ட ஒன்று. கேரளா போன்ற மாநிலத்தின் விவசாயச் சூழல் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களுக்குப் பொருந்தாது. எனவே, அந்தந்த மாநிலங்கள் தங்களது சூழலுக்கு ஏற்றாற்போல் இந்தச் சட்டத்தைத் திருத்திக்கொள்வதே சரி. அதை விட்டுவிட்டு, டெல்லியில் இருந்துகொண்டு நாடு முழுவதும் ஒரேவிதமான சட்டத்தை அமல்படுத்துவது என்பது யதார்த்தத்திற்குப் பொருத்தமாக இருக்காது.

கேள்வி: நிலைமை இவ்வாறு இருக்க வேளாண்மை உற்பத்தி சந்தைக்குழுச் சட்டம் உள்ளிட்ட சந்தை முறைகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னெடுப்புகள் என்ன?

இந்திய வேளாண்மைத் துறையில், சுமார் 86 விழுக்காடு விவசாயிகள் சிறு, குறு விவசாயிகள்தான். இவர்கள் சாகுபடிசெய்யும் பரப்பளவு 44 விழுக்காடு மட்டுமே. மீதமுள்ள 14 விழுக்காடு நில உரிமையாளர்கள்தான் 56 விழுக்காடு பரப்பளவில் விவசாயம் செய்கின்றனர். எனவே, சிறு, குறு விவசாயிகள் உற்பத்தி செய்யும் சிறிய அளவிலான பொருள்களை அருகிலேயே சந்தை செய்யும் சூழல் தற்போது இல்லை.

விவசாயிகள் 5 கி.மீ. சுற்றளவிலேயே தங்கள் உற்பத்திப் பொருள்களை விற்க வேளாண்மை உற்பத்தி சந்தைக்குழுச் சட்டம் அடிப்படையில் மண்டிகளை உருவாக்க வேண்டும் என எம்.எஸ். சுவாமிநாதன் குழு 2006ஆம் ஆண்டே பரிந்துரைத்துள்ளது. இதுபோன்ற வேளாண்மை உற்பத்தி சந்தைக்குழுச் சட்டம் கட்டமைப்புகளை பல மாநிலங்களில் உருவாக்குவதே தற்போதைய தேவை.

மேலும், பெரும் பகுதி விவசாயிகள் குறைந்த அளவிலான உற்பத்தி செய்வதைக் கூட்டுறவு அமைப்புகள் ஒருங்கிணைத்து அதை முறையாகச் சந்தைப்படுத்தும் சூழலை உருவாக்க வேண்டும். உதாரணமாக, அமுல், ஆவின் போன்ற வெற்றிகரமான கூட்டுறவுத் திட்டங்களை எடுத்துக் கொள்ளலாம்.

பேராசிரியர் ஹிமான் ஷூ ஹிந்துவில் எழுதிய கட்டுரையில் ஒரு முக்கியக் கருத்தைத் தெரிவித்திருந்தார். உற்பத்தி செய்யப்படும் கோதுமையில் 69 விழுக்காடும், நெல்லில் 73 விழுக்காடும் கொள்முதல் நிலையங்களுக்கு வருவதில்லை என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்கிறார். அத்தியாவசிய பொருள்களான கோதுமை, நெல் போன்றவைகளுக்கே இதுதான் நிலைமை.

காரணம், பெரும் பகுதி விவசாயிகள் தங்கள் பொருள்களைப் பாதுகாப்பாகச் சேமித்துவைத்துக் கொள்ளவும், கொள்முதல் மையங்களுக்குச் கொண்டுசெல்லவும் வசதிகொண்டவர்களாக இல்லை. எனவே, சேமிப்புக் கிடங்கு, கூடுதல் கொள்முதல் மையங்கள், உள்ளூர் சந்தை ஆகியவற்றை உருவாக்குவதில் அரசு முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும். தவிர சந்தையை, தாராளமயக் கொள்கையுடன் திறந்துவிடுவது பயனளிக்காது.

கேள்வி: ஒப்பந்த வேளாண்மையின் களச்சூழலும் அதில் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகளும் என்ன?

கரும்பு விவசாயத்தைக் கொண்டே ஒப்பந்த வேளாண்மை முறையில் உள்ள சிக்கல்களை நாம் எளிமையாகப் புரிந்துகொள்ளலாம். நீண்டகாலமாகவே நாட்டில் கரும்பு வேளாண்மை என்பது கரும்பு ஆலைகள், நிறுவனங்கள் ஆகியவற்றுடன் ஒப்பந்த வேளாண்மை அடிப்படையிலேயே நடைபெற்றுவருகிறது. ஆனால், இந்த ஆலைகளும் நிறுவனங்களும் விவசாயிகளுக்குச் சேர வேண்டிய கோடிக்கணக்கான ரூபாயைத் தராமல் நிலுவையில் வைத்துள்ளன.

நீண்ட அனுபவமிக்க கரும்புத் துறையிலேயே ஒப்பந்த வேளாண்மைகளுக்கு முழுமையான சாதகமான பலன்களைத் தருவதில்லை என்பதற்கு இதுவே ஒரு உதாரணம். பலம்வாய்ந்த பெரும் நிறுவனம், அமைப்புகளுக்குமுன் சிறு, குறு விவசாயிகள் பலமற்றவர்களாக உள்ள நிலையில்தான் தற்போதும் உள்ளனர். எனவே, விவசாயிகளைப் பாதுகாக்கும்விதமான நடைமுறைகளைக் கொண்டு ஒப்பந்த வேளாண்மை போன்ற விவகாரங்களை அரசு முன்னெடுக்க வேண்டும்.

கேள்வி: அப்படியானால் வேளாண்மைத் துறையில் இந்தத் தாராளமயக்கொள்கை முன்னெடுப்புகள் விவசாயிகளுக்குப் பயன்தராதா?

சிறு, குறு விவசாயிகளுக்கு உற்பத்தியில் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதே அவசியம். அதைவிட்டுவிட்டு சந்தையை திறந்துவிட்டு தனியார்மயம்தான் பலன்தரும் என நம்புவது தவறு. சுதந்திர வர்த்தகம் என்ற அமைப்பில் பெருநிறுவனங்களையும் விவசாயிகளையும் ஒப்பிடுவது திமிங்கலத்துடன் சிறு மீன்களை ஒப்பிடுவதற்குச் சமம். ஐரோப்பிய ஒன்றியமே வேளாண்மைத் துறையை தனது பிடியிலிருந்து முழுமையாக விடுவிக்காமல் பொது வேளாண்மைக் கொள்கையை வகுத்துதான் செயல்பட்டுவருகிறது.

விவசாயிகளுக்குத் தற்போதைய தேவை என்பது தங்களின் உற்பத்தியை ஒருங்கிணைக்கும் கூட்டுறவு அமைப்புகள்தான். கேரளாவில் இந்த கூட்டுறவு அமைப்புகள் மிகப்பெரிய அளவில் சிறப்பாகச் செயல்படுகின்றன. குடும்ப ஸ்ரீ அதற்கு ஒரு சிறந்த உதாரணம். எனவே, முறையான சேமிப்புக் கிடங்குகள், கூட்டுறவுச் சந்தைகள், கட்டமைப்பு வசதிகளை விவசாயிகளுக்குச் செய்து தருவதே தற்போதைய முக்கியத் தேவையாகும்.

கேள்வி: இந்தியாவின் 50 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பு வேளாண்மை ஊரகத் துறையைச் சார்ந்தே உள்ளது. தற்போது குடிபெயர் தொழிலாளர்கள் பெருமளவில் சொந்தக் கிராமங்களுக்குத் திரும்புகின்றனர். இந்தச் சூழலில் வேளாண்மை கிராமப்புற வேலைவாய்ப்பை எப்படி உருவாக்க வேண்டும்?

பெரும்பாலான குடிபெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பிச் செல்லும் நிலையில் அவர்கள் பலர் தற்போதையச் சூழலில் நகர்ப்புறத்திற்கு மீண்டும் திரும்பிச் செல்லப்போவதில்லை. எனவே, அரசு செய்யாத செயலை செய்யவேண்டிய தேவை உள்ளது. ஏராளாமான தரிசு, உபரி நிலங்களை அரசு மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் வகையில் விரிவான நிலச்சீர்த்திருத்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

இது நீண்டகாலமாக முடித்துவைக்கப்படாத செயலாக அரசின் முன் நிற்கிறது. மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலத்தில் நிறைவடையாத நிலச்சீர்த்திருத்த பணிகள் (The Unfinished task of Land Reforms) என்ற பெயரில் குழு ஒன்று அமைக்கப்பட்டது.

வேளாண் பொருளாதார நிபுணர் வெங்கடேஷ் ஆத்ரேயா சிறப்பு நேர்காணல்

உள்ளூர் நில வளங்களைப் பிரித்து திரும்பிவரும் தொழிலாளர்களின் குடும்பத்திற்குக் கொடுத்து வேளாண்மைத் தொழிலில் ஈடுபடவைக்கும் முன்னெடுப்பை அரசு மேற்கொள்ள வேண்டும். இது நீண்ட நெடிய நடவடிக்கைதான். இருப்பினும் அரசு அறிவித்துள்ள மூன்று நடவடிக்கைகளைவிட பிரதானமாக, நிலச்சீர்த்திருத்த நடவடிக்கையைத்தான் நான் கருதுகிறேன்.

நிலச்சீர்த்திருத்தம் என்பதை மேற்கொள்ளாமல் கிராமப்புற வேலைவாய்ப்பைப் பெருக்க வழியில்லை. எனவே, இதுபோன்ற அமைப்பு ரீதியான மாற்றங்களை மேற்கொண்டு அதற்கு மேல்தான் சந்தையைக் கட்டமைக்க வேண்டும் என்பதே எனது கருத்து.

இதையும் படிங்க: வெட்டுக்கிளிகளை அழிப்பதற்கு பதிலாகத் தீவனமாக மாற்றலாம் - சுற்றுச்சூழல் ஆய்வாளர் சுல்தான் இஸ்மாயில்

Last Updated : Nov 19, 2021, 11:57 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.