புதிதாகப் பொறுப்பேற்றுள்ள பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு 2019-20ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை( பட்ஜெட்) தாக்கல் செய்தது. நிதிநிலை அறிக்கை தாக்கலுக்கு முந்தைய தினம் நாட்டின் பொருளாதார ஆய்வறிக்கையானது (Economic survey) நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நண்பகல் 12 மணியளவில் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். அதன்படி நாட்டின் தலைமை பொருளாதார ஆலோசகர் இந்த ஆய்வறிக்கையைத் தயார் செய்தார்.
இந்தாண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையைப் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தேசிய பொருளாதார ஆலோசகர் கே.சுப்ரமணியன் தயார் செய்தார். இந்த அறிக்கையானது நாட்டின் பொருளாதார நிலை குறித்து விரிவான பார்வையில் உருவாக்கப்படும். இந்த அறிக்கையின் அடிப்படையில்தான் கொள்கை முடிவுகள் எடுக்கப்பட்டு பட்ஜெட் அறிவிப்புகள், திட்டங்கள் அமைக்கப்படும். எனவே பட்ஜெட்டுக்கு நிகராக பொருளாதார ஆய்வறிக்கையும் பார்க்கப்படுகிறது.
இந்தாண்டுக்கான ஆய்வறிக்கையை தாக்கல் செய்வதற்கு முன்பாக பொருளாதார ஆலோசகர் சுப்ரமணியன், எங்கள் குழு முழு முயற்சியுடன் சிறப்பான முறையில் தயார் செய்துள்ளோம். நாட்டின் பொருளாதார வளர்சிக்கான பாதையில் பயணிக்க இறைவன் அருள் புரிவார் என நம்புவதாக தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டவுடன், இந்த பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சகத்தின் வலைதள பக்கங்களில் ஒன்றான http://mofapp.nic.in:8080/economicsurvey/ இல் பதிவிறக்கம் செய்து படிக்கலாம்.