பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதும் அரசின் வருவாய், செலவு, முதலீடு உள்ளிட்ட நிதி விவரங்கள் கொண்ட நிதி மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிதி மசோதா நிறைவேறிய பின்னரே பட்ஜெட் குறித்த நாடாளுமன்ற நடவடிக்கைகள் நிறைவுபெறும்.
இந்நிலையில், மக்களவையில் நேற்று 2019ஆம் ஆண்டிற்கான நிதி மசோதா குறித்த விவாதத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்துப் பேசினார். அப்போது அந்நிய முதலீடுகள், பெரும் பணக்காரர்களுக்கு விதிக்கப்பட்ட கூடுதல் சிறப்பு வரிகள், புதிய நேரடி வரிக்கொள்கை, செய்தித்தாள் அச்சிடப் பயன்படும் காகிதங்களுக்கான இறக்குமதி வரி உயர்வு போன்ற அம்சங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டு விவாதிக்கப்பட்டது.
இறுதியாக பதிலளித்துப் பேசிய நிர்மலா சீதாராமன், மக்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்கிறது. வயதானவர்களுக்கான ஓய்வூதியம், ரயில்வே தரத்தை மேம்படுத்துதல், பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவித்தல், சூரிய மின்சக்தி பயன்பாட்டை அதிகரித்தால் போன்ற திட்டங்களுக்கு நிதிநிலை அறிக்கையில் முக்கியத்துவம் பெற்றுள்ளதாகக் கூறினார்.
இறுதியில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிதி மசோதாவானது மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.