நாட்டின் பொருளாதார நடவடிக்கை கடந்த சில மாதங்களாக பெரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. முதலீடு, உற்பத்தி, நுகர்வு என அனைத்துக் கூறுகளும் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. மேற்கண்ட சிக்கல்களால் நாட்டின் வளர்ச்சி விகிதம் ஐந்து விழுக்காடாகக் குறையும் சூழலுக்குத் தள்ளப்பட்டது.
சுணக்கத்தில் உள்ள நாட்டின் பொருளாதார நிலையை மீட்டெடுக்கும் விதமாக மத்திய நிதியமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.
வங்கிகள் இணைப்பு, ஜிஎஸ்டி வரியில் மாற்றம், அந்நிய முதலீட்டை ஈர்க்கும் கொள்கைகள் என பல்வேறு அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் அறிவித்தார். குறிப்பாக, கடந்த வாரம் பெருநிறுவனங்கள் எனப்படும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரிவிகிதத்தில் முக்கிய மாற்றத்தைக் கொண்டுவந்தார்.
நாட்டின் முதலீடுகளை ஊக்குவிக்கும் நோக்கில் கார்ப்பரேட் நிறுவனங்களின் வரியை 30 விழுக்காட்டிலிருந்து 22 விழுக்காடாக குறைக்கும் அறிவிப்பை நிர்மலா சீதாராமன் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டார்.
இதைத் தொடர்ந்து தனிநபர் வருமான வரியையும் குறைக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கியுள்ளது. நேரடி வரிக்குக் கீழ் இயங்கும் நேரடி வரிவிதிப்பு குழு தனிநபர் வருமான வரிக்கான மாற்றங்கள் குறித்த பரிந்துரை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி தனிநபர் வருமான உச்சவரம்பை அதிகரிக்க அக்குழு பரிந்துரை செய்துள்ளது.
தனிநபர் வருமான வரிவிலக்கு உச்சவரம்பை ஐந்து லட்சம் ரூபாயாக அதிகரிக்கவும், 5-10 லட்சம் வருமானம் கொண்டவர்களுக்கான வரியை 10 விழுக்காட்டிலிருந்து ஐந்து விழுக்காடாக குறைக்கவும் பரிந்துரை செய்துள்ளது.
பரிந்துரை நடைமுறைக்கு வரும்பட்சத்தில் இதன்மூலம் நடுத்தர மக்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வரிக்குறைப்பு மூலம் நடுத்தர மக்களின் நுகர்வு அதிகரித்து வர்த்தகம் பெருகும் என குழு பரிந்துரையில் தெரிவித்துள்ளது. இரண்டு கோடிக்கு மேல் தனிநபர் வருமானம் உள்ளவர்களுக்கு 35 விழுக்காடு வரி விதிக்கவும் நேரடி வரிவிதிப்பு குழு பரிந்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.