நடப்பு நிதியாண்டில் மத்திய, மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த நிதிப் பற்றாக்குறை 13-14 விழுக்காடு வரை உயரக்கூடும் என்று தெரிவித்த சுப்பாராவ், “கோவிட்-19 பரவுதலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் காரணமாக மார்ச் 26 அன்று மத்திய அரசு அறிவித்த நிதி உதவி போதாது” என்று தெரிவித்தார்.
மந்தன் அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், 'கரோனா நெருக்கடியின் சவால் - பொருளாதார பரிமாணங்கள்' என்ற தலைப்பில் பேசிய முன்னாள் ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் சுப்பாராவ், “திறந்தநிலைக் கடன்கள் வட்டி விகிதங்களை அதிகமாக்குவது போன்ற எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால், மத்திய அரசு தனது கடன்களை ஈடுசெய்ய வேண்டும் என்றும் கூறினார்.
நிகழ்ச்சியில் அவர் மேலும் கூறியதாவது:-
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.8 விழுக்காடு நிதி ஆதரவுத் தொகுப்பை அரசு அறிவித்துள்ளது. இது போதுமானதாக இல்லை. மார்ச் 26 அன்று அறிவிக்கப்பட்டபோதே இது போதாது. இது தற்போது இன்னும் மிக குறைவாகத் தெரிகிறது. உண்மையில், அரசு அதிகச் செலவு செய்ய வேண்டும். மேலும் மூன்று விஷயங்களுக்கு அதிக செலவு செய்யுங்கள். அவற்றில் முதன்மையானது வாழ்வாதார ஆதரவை விரிவுபடுத்துவதுதான்.
மார்ச் 25ஆம் தேதி முதல், நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது, மில்லியன் கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்படும் நிலைக்கு ஆளாகின. அவர்களின் சேமிப்புகளில் பெரும்பாலானவை வறண்டுவிட்டதால், இன்னும் பல குடும்பங்களுக்கு வாழ்வாதார ஆதரவு வழங்கப்பட வேண்டும். அதிகமான வீடுகளுக்கு பொருளாதார மீட்பை ஈடுகட்ட அரசு முன்வர வேண்டும்.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் அதிகம் கொடுக்க வேண்டும். அவர்களுக்கு அதிக நேரம் ஒதுக்க வேண்டும். அரசு செலவினங்களுக்கான முதல் சவால், அடுத்த மூன்று மாதங்களுக்கு ஏழைகளுக்கு இலவச உணவுப் பொருள்கள் மற்றும் சமையல் எரிவாயு உள்ளிட்டவைகள் வழங்குவது. இது ஒரு தார்மீக மற்றும் அரசியல் ரீதியாக அரசு அதிகம் செலவு செய்ய வேண்டும் என்பது மிகவும் தெளிவாக தெரிகிறது.
அதிகம் செலவு செய்ய வேண்டுமானால், அரசு அதிகம் கடன் வாங்க வேண்டும். இது ஒரு அசாதாரண நெருக்கடி என்பதால், கடன் வரம்பு உள்ளது என்பதை ஏற்க முடியாது. இந்த நிதியாண்டிற்கான மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த நிதிப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.5 விழுக்காடாகும்.
முழு ஊரடங்கின் காரணமாக ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பு காரணமாக, பெயரளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சரிவு ஏற்பட்டதால், நிதி பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 விழுக்காட்டிற்கும் அப்பால் செல்லும். கூடுதல் கடன்கள் நிதிப் பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13 முதல் 14 விழுக்காடு வரை கொண்டு செல்லும்.
இது மிகவும் அதிகமாக உள்ளது. அதிக நிதிப் பற்றாக்குறை அனைத்து எதிர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்தும். என்னைப் பொறுத்தவரை, ஆழ்ந்த நெருக்கடியில் இருக்கும் உள்நாட்டு நிதித்துறை, கோவிட்-19 நெருக்கடி முடிவடையும் நேரத்தில் அதீத 'ஆழ்ந்த அழுத்தத்தில்' இருக்கும். இருப்பினும் கச்சா விலைகள் வீழ்ச்சியடைதல் மற்றும் வேளாண் விளைச்சல் போன்றவை ஆறுதல் அளிப்பதாக இருக்கும்
உலகம் சிறிது காலம் கரோனா வைரசுடன் வாழ வேண்டியுள்ளது. தொற்றுநோயைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுகின்றன. நமது பலவீனமான மருத்துவ உள்கட்டமைப்பு மற்றும் அதிக மக்கள் தொகை ஆகியவற்றால் இந்த சூழல் இந்தியாவுக்கு மிகக் கடுமையானதாக உள்ளது.
ஒருபுறம், தொற்று பரவலைக் கட்டுபடுத்துவதில் ஏற்படும் எந்த இடைவெளிகளும் லட்சக்கணக்கான உயிர்களை இழப்பதைக் குறிக்கும். மறுபுறம், தொற்றுநோயைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு லட்சக்கணக்கானோரின் வாழ்வாதார இழப்பைக் குறிக்கும்.
குறிப்பாக, இந்தியாவைப் பொறுத்தவரை, நமது பொருளாதாரம் மோசமான நிலையில் இருப்பதால் இது மிகவும் கடினமான சமநிலைப்படுத்தும் செயலாகும்” என்று சுப்பாராவ் கூறினார்.
இதையும் படிங்க: பயணிகள் ரயில் 12ஆம் தேதி முதல் இயங்கும்: ரயில்வே அறிக்கை