இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தற்போது அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வரும் நிலையில், பேங்க் ஆப் இங்கிலாந்தின் ஆளுநராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து பி.பி.சி. செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த ரகுராம் ராஜன், இந்த தகவலை முற்றிலும் மறுத்துள்ளார். எந்த பதவிக்கும் தான் விண்ணப்பிக்கவில்லை, மத்திய வங்கிப்பணிகளில் முன்பு இருந்தது போல தனிச்சுதந்திரம் தற்போது இல்லை என்றார். அண்மைக்காலமாக உலகளவில் உள்ள மத்திய வங்கிகள் அரசியல் மையமாக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் அரசியல் தலையீடுகள் பெருமளவில் உள்ளதாகவும் தெரிவித்தார்.
பொருளாதாரம் சார்ந்த விவகாரங்கள் அத்துறை நிபுணர்களால் சுதந்திரமாக செயல்படவே உலக நாடுகளின் மத்திய வங்கிகளுக்குத் தனி அதிகாரம் வழங்கப்பட்டன. ஆனால், இந்த சுதந்திரம் பறிக்கப்படும் வகையில் முக்கிய முடிவுகளில் அரசியல், அரசாங்க தலையீடு இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது, என்றார்.
உலகின் முன்னணி பொருளாதார நிபுணராகக் கருதப்படும் ரகுராம் ராஜன், இக்கருத்தை வெளிப்படையாகத் தெரிவித்திருப்பது விவாதத்தைக் கிளப்பியுள்ளது.