ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் நிதி ஆயோக்கின் முன்னாள் சி.இ.ஓ., 3 மூத்த அலுவலர்களை விசாரிப்பதற்கான அனுமதியை சிபிஐக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது.
அந்நிய மூதலீடு உரிமம் தொடர்பாக முறைகேடு செய்ததாக ஐ.என்.எக்ஸ். மீடியா மீது சிபிஐயும், அமலாக்கத் துறையும் வழக்குப்பதிவு செய்தன. ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்துக்கு விதிமுறை மீறி உரிமம் அளித்ததாகக் புகாரளிக்கப்பட்டு, அப்போது நிதியமைச்சராக இருந்த ப. சிதம்பரம் மீது குற்றம்சாட்டப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வழக்கு தொடர்பாக அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீதும் சிபிஐ, அமலாக்கத் துறையினர் வழக்குத் தொடுத்துள்ளனர்.
இந்நிலையில், இவ்வழக்கில் தொடர்புடையதாகக் கூறி 4 மூத்த அலுவலர்களிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசிடம் சிபிஐ அனுமதி கேட்டிருந்தது. அதற்கான அனுமதியை மத்திய அரசு தற்போது வழங்கியுள்ளது.
விசாரணை நடத்தப்படவுள்ள 4 பேரில் நிதி ஆயோக் அமைப்பின் முன்னாள் சி.இ.ஓ.வான சிந்துஸ்ரீ குல்லாரும் அடக்கம். 2004 முதல் 2008 வரை பொருளாதார விவகாரங்கள் துறையில் கூடுதல் செயலராக இருந்த இவர், பின்னர் நிதிஆயோக் அமைப்பின் தலைமைச் செயல் அலுவலராகவும் பதவி வகித்துள்ளார்.
அத்துடன் சிறு, குறு, நடுத்தர தொழில் துறை முன்னாள் செயலர் அனுப் கே. பூஜாரி, தற்போதைய இமாச்சலப் பிரதேச அரசின் முதன்மைச் செயலரான பிரபோத் சக்சேனா மற்றும் ரபீந்திர பிரசாத் ஆகியோரிடமும் சிபிஐ விசாரணை நடத்தவுள்ளது.
இதையும் படிங்க: #INXMediacase - "சோனியா, மன்மோகனுக்கு எங்கள் குடும்பம் நன்றியுடன் இருக்கும்!"- கலங்கிய கார்த்தி சிதம்பரம்