இந்தியா சில ஆண்டுகளாக வேலைவாய்ப்பு என்ற அம்சத்தில் பெரும் தலைவலியை சந்தித்துவருகிறது. தேவைக்கேற்ப புதிய வேலைகளை உருவாக்க இயலாமல் தவறி வரும் இந்தியா, அதிகளவில் வேலையிழப்பு பிரச்னையும் எதிர்கொண்டுள்ளது.
சி.எம்.ஐ.இ அமைப்பின் ஆய்வறிக்கையின்படி, இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை 8.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த இரண்டாண்டுகளில் சுமார் 47 லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர்.
இதைவிட முக்கிய சிக்கல் என்னவென்றால், நாட்டின் 68 சதவீதத்தினர் வேலையில்லாமல் இருப்பது. இதில் பெரும்பாலானோர் 20 முதல் 29 வயதுக்குட்பட்டவர்களாவர். இந்த சிக்கல் உடனடி நடவடிக்கைகளால் களையப்படவில்லை என்றால் நாட்டின் வளர்ச்சிக்கே பெரும் அபாயம் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக விவசாயம், தொழில்துறை வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் அதீத கவனம் தேவை என்று தெரிவிக்கப்படுகிறது.
உடனடி நடவடிக்கைகளும் தீர்வுகளும்:
வேலைவாய்ப்பு சிக்கலைத் தீர்க்க மத்திய நிதிநிலை அறிக்கையில் இது குறித்த முக்கிய அறிவிப்புகள் இடம்பெற வேண்டும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அவை:
- ஜி.எஸ்.டி விதிகள் தளர்த்தப்பட்டு முதலீடுகள் தாராளமயமாக்கப்பட வேண்டும்
- மேலும் வேலையிழப்பு ஏற்படாத வண்ணம் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும்
- தொழில் தொடங்கும் நடைமுறை சிக்கல்கள் நீக்கப்பட்டு விதிமுறைகள் எளிதாக்கப்பட வேண்டும்
- விவசாயம், தொழில்துறைகளில் ஆக்கப்பூர்வமான பலன்கள் கிடைக்கும் வண்ணம் புதிய நடவடிக்கைகள் உருவாக்கப்பட வேண்டும்