காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தாலிபன்கள் நேற்று (ஆக. 15) கைப்பற்றிய பிறகு, மிகவும் பதற்றமான சூழல் அங்கு நிலவி வருகிறது. தாலிபன்கள் காபூல் நகரத்திற்கு நுழைந்த சில மணி நேரங்களிலேயே சாலைகளிலும், வங்கியிலும் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக குவிந்தனர்.
காபூல் சர்வதேச விமானநிலையத்தில் இருந்து வெளிநாட்டிற்கு தப்பித்துச் செல்வதற்காக மக்கள் விமான ஓடுதளத்தில் விமானத்தோடு ஓடிசெல்லும் காட்சிகள் மக்களின் மனபயத்தை வெளிச்சமிட்டு காட்டியது.
பெரும் தாக்கம்
இந்தியாவிற்கு அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் நிலவும் தற்போதைய அரசியல் பதற்றம் வணிகத்திலும் சுணக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக இந்திய ஏற்றுமதி அமைப்புகளுக்கான கூட்டமைப்பின் (FIEO) பொது இயக்குநர் அஜய் சாஹய் தெரிவிக்கையில், "இந்த அரசியல் சூழல் இரு நாட்டிற்கும் இடையிலான வணிகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது" என்றார்.
அதேபோன்று அந்த கூட்டமைப்பின் துணைத் தலைவரான காலித் கான் கூறுகையில், "ஆப்கானிஸ்தான் உடனான வணிகப் போக்குவரத்துகள் விமானத்தையே நம்பியுள்ளன. இதனால், அங்கு நிலவும் அரசியல் பதற்றம் தணிந்தால் மட்டுமே மீண்டும் வணிகம் தொடங்கப்படும்" என்றார்.
பணப் பரிவர்த்தனை குறித்த அச்சம்
சாய் இன்டர்நேஷ்னல் நிறுவனத்தலைவரும், ஏற்றுமதியாளருமான ராஜிவ் மல்ஹோத்ரா கூறுகையில், " தாலிபன் அமைப்புகளின் அடுத்த கட்ட நகர்வுகளை கூர்மையாக கண்காணித்து வருகிறோம்.
நிலைமை சீராகும் வரை எந்தவிதமான வணிகமும் நடைபெறாது. வணிகப் பரிவர்த்தனை செய்ய கடினமாக இருக்கும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.
"ஆப்கானிஸ்தானில் இந்தியாவின் உதவியுடன் உள்நாட்டுப் பொருட்களுக்கான சந்தை ஒன்று உருவாக்கி வருவதாகவும், தற்போதைய சூழ்நிலை காரணமாக, இவை அனைத்தும் நிறுத்தப்படும்" என ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பேராசிரியர் பிஸ்வாஜித் தார் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இந்தியாவின் ஏற்றுமதி பொருள்கள் அவர்களுக்கு தேவை என்பதால், நம்மிடைய உள்ள வணிகத்தை அவர்கள் நிறுத்த மாட்டார்கள் என ஏற்றுமதி கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் எஸ்.கே. சரஃப் தெரிவித்துள்ளார்.
இருதரப்பு வர்த்தகம்
இரு நாட்டிற்கும் இடையிலான வர்த்தகம் 2020-21இல் 1.4 பில்லியன் அமெரிக்க டாலர்களாக (ரூ.1,03,849 கோடி)இருந்தது, 2019-20இல் 1.52 பில்லியன் டாலராக இருந்தது.
2020-21ஆம் ஆண்டில் இந்தியா தனது ஏற்றுமதியில் 826 மில்லியன் அமெரிக்க டாலர்களையும், இறக்குமதியில் 510 மில்லியன் அமெரிக்க டாலர்களையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்பொதைய நிலவரப்படி, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.74.18 ரூபாய் ஆகும்.