ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் வருகைக்குப் பிறகு நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பெரும் மாற்றங்களைக் கண்டன. சந்தையில் ஜியோவின் போட்டியை சமாளிக்க முடியாமல் முன்னணி நிறுவனங்களான வோடஃபோன், ஐடியா ஆகிய இரண்டும் இணைக்கப்பட்டு வோடஃபோன்-ஐடியாவாக மாறியது. இந்த இணைப்புக்குப் பின்னரும் அந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை தொடர்ச்சியாக சரிந்துவருகிறது.
இந்தியாவின் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வாடிக்கையாளர் எண்ணிக்கையை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்) தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த ஒரு மாதத்தில் வோடஃபோன் - ஐடியா நிறுவனத்திலிருந்து 41 லட்சம் வாடிக்கையாளர்கள் விலகியுள்ளனர்.
இந்நிலையில், வோடஃபோன் - ஐடியா நிறுனத்தின் தலைமை செயல் அலுவலர் பதவியிலிருந்து பேலேஷ் சர்மா விலகியுள்ளார். தனது சொந்த காரணங்களுக்கு பதவியிலிருந்து விலகுவதாக நிறுவனத்திற்கு அவர் விளக்கம் தெரிவித்துள்ளார். இந்த முடிவின் எதிரொலியாக ரவீந்தர் டக்கர் என்பவரை அந்நிறுவனம் செயல் அலுவலராக நியமித்துள்ளது. மேலும் பேலேஷ் சர்மாவுக்கு வேறு பொறுப்புகளை வழங்க திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.