இந்தியாவின் முதல் உள் துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாளை முன்னிட்டு தேசிய ஒற்றுமை தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டுவருகிறது. இதனை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ஜம்மு காஷ்மீர் காவல் துறை இயக்குநர் தில்பாக் சிங், என்கவுன்டர் சம்பவங்களின்போது பிரிவினைவாதிகள் சரணடைவது வரவேற்கத்தக்க ஒன்று எனத் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "கடந்த சில என்கவுன்டர் சம்பவங்களின்போது பிரிவினைவாதிகள் சரணடைந்துள்ளனர். இது வரவேற்கத்தக்க ஒன்று. துப்பாக்கிச்சூடு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது பாதுகாப்புப் படையினரின் கோரிக்கையை ஏற்று ஆயுதமேந்திய பிரிவினைவாதிகள் சரணடைந்துள்ளனர்.
ஆயுதம் ஏந்தியவர்கள் வன்முறையைக் கைவிட்டு வருகின்றனர். அவர்களுக்கு அனைத்துவிதமான உதவிகளும் செய்து தரப்படும்.
தவறான பாதையில் திசை மாறிச் சென்ற இளைஞர்கள் திரும்பிவர வேண்டும். இளைஞர்கள் விளையாட்டுகளில் ஈடுபடுகின்றனர். விளையாட்டு நிகழ்ச்சிகளை நடத்தி அவர்களுக்குத் தேவையான அனைத்தும் செய்து தரப்படும்" என்றார்.