ஊரடங்கு உத்தரவால் ஆட்டோமொபைல் துறை கடும் சரிவை சந்தித்தது. ஏப்ரல், மே மாதங்களில் முன்னணி கார் நிறுவனங்களாலும் ஒரு கார்கூட விற்பனைசெய்ய முடியாத நிலை ஏற்பட்டது. பின்னர், பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக ஊரடங்கில் பல தளர்வுகளை மத்திய அரசு அறிவித்தது.
இதையடுத்து, வாகன துறையிலும் முன்னேற்றத்தைக் காண முடிந்தது. குறிப்பாக, பண்டிகை காலங்களில் கார்கள் மீதான மோகம் அதிகரித்தது. பல வகையான சலுகைகள் காரணமாக, மக்கள் கார்களை வாங்க மீண்டும் தொடங்கியுள்ளனர். அந்த வரிசையில், மாருதி சுஸூகி கார்கள் விற்பனை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாக அதன் நிர்வாக இயக்குநர் சஷாங்க் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "பண்டிகை காலத்தில் அதிகரித்துள்ள வாகன விற்பனை, டிசம்பர் மாத இறுதிவரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் மத்தியில் தேவை அதிகரித்தல், குறைந்த வட்டி விகிதங்கள் போன்றவற்றால் வாகன விற்பனை அதிகரிக்கின்றது.
எதிர்கால வாகன விற்பனையானது, தொற்றுநோய் பாதிப்பைப் பொறுத்துதான் தீர்மானிக்கப்படும். நவம்பர் - ஜனவரி காலகட்டங்களில் அதிகப்படியான திருமண நிகழ்ச்சிகள் நடைபெறுவதும் வாகன விற்பனை அதிகரிப்பின் பின்னணியில் முக்கியப் பங்கு வகிக்கிறது" என்றார்
மேலும் அவர் கூறுகையில், "கடந்த மாதம், நிறுவனத்தின் மொத்த விற்பனை 18.9 விழுக்காடு அதிகரித்து ஒரு லட்சத்து 82 ஆயிரத்து 448 யூனிட்களை விற்பனையானது. ஆனால், 2019 அக்டோபரில் ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 435 யூனிட்கள் மட்டுமே விற்பனையானது.
எங்கள் வாகன உற்பத்தியை சூழ்நிலைகள், தேவைக்கேற்ப அதிகரித்துவருகிறோம். ப்ரெஸா போன்ற எங்களின் சில மாடல்களுக்கு இன்னும் வெற்றிபெற சில காலங்கள் உள்ளன. உள்நாட்டுச் சந்தையில், மாருதி சுஸூகி பலினோ, Hyundai Elite i20, Tata Altroz, and Hyundai Grand i10 Nios போன்றவற்றின் லைக்குகளை ஏற்கனவே அள்ளிவிட்டது" எனத் தெரிவித்தார்.
முன்னதாக, மாருதி சுஸூகி நிறுவனம் டெல்லி, புனே, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய நான்கு நகரங்களிலும் "சப்ஸ்கிரைப்" திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்தின்படி, வாகனத்தைப் பயனர்கள் முழுத் தொகை கொடுத்து வாங்காமல், சொந்த பயன்பாட்டிற்குப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
ஆனால், காருக்கான பராமரிப்பு மற்றும் காப்பீடுத் தொகை உள்ளிட்ட அனைத்து மாதாந்திர செலவுகளையும் பயனர்கள்தான் பார்த்துக்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர். இந்தத் திட்டம் விரிவுப்படுத்தப்படும்பட்சத்தில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.