இந்தியாவில் கோவிட்-19 பரவல் காரணமாக மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக அனைத்து வகையான கடைகளும் மூடப்பட்டன. ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களும் அத்தியாவசிய பொருள்களைத் தவிர மற்ற பொருள்களை விற்பனை செய்யக்கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டது.
நாடு முழுவதும் தற்போது மே 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதில் பல்வேறு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி இந்தியாவில் கரோனா பரவல் அதிகமாகவுள்ள containment zonesகளைத் தவிர அனைத்து பகுதிகளிலும் ஆன்லைன் ஷாப்பிங்கை மீண்டும் தொடங்க மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதன்படி பிளிப்கார்ட், அமேசான், பேடிஎம் மால் ஆகியவை தங்கள் சேவைகளை மீண்டும் தொடங்கின. பேடிஎம் மால் தளத்தில் ட்ரிம்மர்கள், ஷேவர்கள், ஹேர் ட்ரையர்கள் உள்ளிட்ட சிகை அலங்கார பொருள்களின் விற்பனை 50 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது. இந்த பொருள்களின் விற்பனை வரும் காலங்களில் தொடர்ந்து அதிகரிக்கும் என்று பேடிஎம் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் சீனிவாஸ் மோத்தே தெரிவித்தார்.
பிளிப்கார்ட் நிறுவனத்தின் தாய் நிறுவனமான வால்மார்ட் நிறுவனத்தின் தலைமை வணிக அலுவலர் அஞ்சு சிங் கூறுகையில், "ஊரடங்கு அமல்படுத்தப்பட்டவுடன் சானிடைசர்கள், ஹேண்ட் வாஷ்கள், வீட்டைச் சுத்தம் செய்யும் பொருள்கள் ஆகியவற்றின் விற்பனை மல மடங்கு அதிகரித்தது.
அனைத்து வகையான பொருள்களையும் விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதியளித்ததைத் தொடர்ந்து சமையல் பொருள்கள், அயன் பாக்ஸ், குக்கர்கள், ஃபேன்கள் ஆகியவற்றின் விற்பனை அதிகரித்துள்ளது" என்றார்.
மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ள புதிய வழிமுறைகள் மூலம் சிறு, குறு, மற்றும் நடுத்தர தொழில்கள் ஆன்லைன் ஷாப்பிங்கை பயன்படுத்தி நல்ல லாபத்தை அடையலாம் என்றும், ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.
இதையும் படிங்க: தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு ஆதரவாக புதிய ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச்!