இந்த டிஜிட்டல் யுகத்தில் பெரும்பாலான முக்கியமான தகவல்கள் கணினிகளிலேயே சேமித்துவைக்கப்பட்டுள்ளன. கணினிகளில் நாம் சேமித்துவைத்துள்ள முக்கியத் தகவல்களை ஹேக்கர்கள் திருடுவதும் தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றன.
எளிய மனிதர்கள் முதல் பெரு நிறுவனங்கள் வரை அனைவரும் இதனால் பாதிக்கப்படுகின்றனர். கணினிகளைப் பாதுகாக்க பல ஆன்ட்டி வைரஸ் மென்பொருள்கள் உருவாக்கப்பட்டாலும், இதுபோன்ற சைபர் குற்றங்களை முழுவதுமாகத் தடுத்துநிறுத்த முடிவதில்லை.
இந்நிலையில், ஹேக்கிங்கை தடுக்க மைக்ரோசாப்ட் நிறுவனம், Kernel Data Protection (KDP) என்ற புதிய பாதுகாப்பு தொழில்நுட்பத்தை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் விண்டோஸ் 10 இயங்குதளத்தில் இயங்கும் கணினிகளைப் பாதுகாக்க முடியும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
பொதுவாக, சைபர் குற்றவாளிகள் கணினியில் வைரஸ்களை அனுப்பி நாம் சேமித்து வைத்திருக்கும் தகவல்களில் தேவையற்ற சில மாற்றங்களை ஏற்படுத்துவார்கள். சில சமயங்களில் அதை நம்மால் பயன்படுத்த முடியாத வகையில் encrypt செய்வார்கள்.
தற்போது விண்டோஸ் வெளியிட்டுள்ள புதிய பாதுகாப்பு தொழில்நுட்பம் முக்கியமான kernel memoryகளை ரீட் ஒன்லி (read-only) வகை ஃபைல்களாக மாற்றும். இவ்வாறு ரீட் ஒன்லி ஃபைல்களாக kernel memory மாற்றப்படுவதால் ஹேக்கர்கள் கணினியிலுள்ள தரவுகளை மாற்ற முடியாது. இதன் மூலம் கணினியை சைபர் குற்றவாளிகளிடமிருந்து காப்பாற்ற முடியும் என்று மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ஆப்பிள் ஐஓஎஸ் 14: சிறப்பம்சங்கள் என்னென்ன?