திருப்பதி : திருப்பதி கோயிலில் பாகிஸ்தான் உள்பட 157 நாடுகளின் பணங்கள் காணிக்கையாக கிடைத்துள்ளன.
உலகின் பணக்கார கோயிலான திருப்பதி கோயில் உண்டியல் எண்ணப்பட்டன. கோயிலுக்கு காணிக்கையாக 157 நாடுகளின் பணங்கள் கிடைத்துள்ளன. அதில் பாகிஸ்தான் நோட்டுகளும் அடங்கும்.
இதில் அதிகப்பட்சமாக மலேசியன் ரிங்கட் 46 விழுக்காடும், அமெரிக்க டாலர்கள் 16 விழுக்காடும் கிடைத்துள்ளன. இதில் பாகிஸ்தான் நாட்டு ரூபாய் நோட்டுகளும் அடங்கும்.
இது குறித்து அலுவலர் ஒருவர் கூறுகையில், “திருமலை கோயில் உண்டியலில் பாகிஸ்தான் நாட்டு ரூபாய் நோட்டுகள் கிடைப்பதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை” என்றார்.
எனினும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் தற்போது கோயிலில் வெளிநாட்டு கரன்சி வருமானம் குறைந்துள்ளது. அந்த வகையில் 2019-20 காலகட்டங்களில் 4.73 லட்சம் வெளிநாட்டு கரன்சிகள் காணிக்கையாக வந்திருந்தன. அதன்மூலம் ரூ.27 கோடியே 49 லட்சம் வருமானம் கிடைத்தது.
இந்நிலையில் ஏப்ரல் 2020 முதல் மார்ச் 2021 வரை 30 ஆயிரத்து 300 வெளிநாட்டு கரன்சிகள் கிடைத்தன. இதன்மூலம் கோயிலுக்கு ரூ.1 கோடியே 92 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது.
கோவிட் பரவல் காரணமாக கோயில் நடை அடைப்பு உள்ளிட்ட காரணங்களால் வருமானம் பாதிக்கப்பட்டுள்ளதாக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். ஏப்ரல் 2021இல் 4 ஆயிரத்து 779 கரன்சிகள் மூலம் ரூ.37 லட்சத்து 22 ஆயிரத்து 809 கிடைத்துள்ளது. நடப்பு நிதியாண்டில் கோயில் வருமானம் ரூ.1,131 கோடியாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : திருப்பதி ஆகஸ்ட் மாத தரிசனம் - ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்