கிழக்கு லடாக்கில் இந்திய-சீன ராணுவத்தினரிடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து எல்லையில் பதற்றம் நிலவிவருகிறது. இந்நிலையில், டிக்டாக், யூசி பிரவுசர் உள்ளிட்ட 59 சீனச் செயலிகளுக்குத் தடைவிதித்து இந்திய அரசு நேற்று உத்தரவிட்டது. முன்னதாக, சீனச் செயலிகளால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி அந்நாட்டுச் செயலிகளைத் தடைசெய்ய உளவுத் துறை பரிந்துரைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
130 கோடி இந்தியர்களின் தனியுரிமையைப் பாதிக்கும் வகையிலும், இந்தியாவின் இறையாண்மை, பாதுகாப்பு, ஒருமைப்பாடு ஆகியவற்றிற்கு எதிராகவும் இந்தச் செயலிகள் செயல்படுவதால், இவை தடைசெய்யப்படுவதாக மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு தடைவிதித்துள்ள முக்கியச் செயலிகளுக்கான மாற்றுச் செயலிகள் குறித்து ஒரு தொகுப்பு...
AppLock மற்றும் Vault - Hide போன்ற சீனச் செயலிகள் புகைப்படங்கள், வீடியோக்களை மற்றவர்கள் அணுக முடியாத வகையில் லாக் செய்கிறது. இந்தச் சீனச் செயலிகளுக்குப் பதில் ஸ்மார்ட் ஆப் லாக்கர், லாக்ஆப் - பிங்கர்பிரிண்ட், கீப் சேஃப், நார்டன் ஆப் லாக், லாக் மைபிக்ஸ் சீக்ரெட் ஃபோட்டோ வால்ட் போன்ற செயலிகளைப் பயன்படுத்தலாம்.
சீனாவைச் சேர்ந்த யூசி பிரவுசருக்கு பதில் ஓபேரா மினி, கூகிள் குரோம், பயர்பாக்ஸ் பிரவுசர் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.
கேம்ஸ்கேனர் செயலியை ஷாங்காயைச் சேர்ந்த சீன நிறுவனமான ஐ.என்.டி.எஸ்.ஐ.ஜி. என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. அதற்குப் பதிலாக, அடோப் ஸ்கேன், மைக்ரோசாஃப்ட் ஆபிஸ் லென்ஸ், கூகிள் வழங்கும் ஃபோட்டோஸ்கான், டாக் ஸ்கேனர்-பிடிஎஃப் கிரியேட்டர் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தப்படலாம்.
சீனாவின் பியூட்டிபிளஸ் மற்றும் யூகேம் ஆகிய செயலிகளுக்குப் பதில் இந்தியன் செல்பி கேமரா என்ற இந்தியச் செயலியைப் பயன்படுத்தலாம். மேலும், PicsArt, Adobe Photoshop, Lightroom, Snapseed மற்றும் B612 ஆகிய செயலிகளையும் பயன்படுத்தலாம்.
வீடியோக்களை விரைவாக எடிட் செய்ய, தடைசெய்யப்பட்ட விவா வீடியோ, கியூ வீடியோ இன்க், விவாக்கட், ஃபிலிமொராகோ ஆகிய செயலிகளுக்குப் பதில் கைன்மாஸ்டர், அடோப் பிரீமியர் கிளிப், மேஜிஸ்டோ ஆப்ஸ் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.
தடைசெய்யப்பட்ட வீடியோ கான்பரன்சிங் செயலியான ஜூம் செயலிக்குப் பதிலாக கூகிள் மீட், ஸ்கைப், மைக்ரோசாஃப்ட் டீம்ஸ், கூகிள் டியோ, வாட்ஸ்அப் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தலாம். மேலும், இந்தியாவின் SAY NAMASTE என்ற செயலியையும் பயன்படுத்தலாம்.
அதேபோல சீனாவின் கோ கீபோர்ட், மின்ட் கீபோர்ட் ஆகியவற்றுக்குப் பதிலாக கூகிள் இன்டிக் கீபோர்ட், ஜிஜ்சர் கீபோர்ட், ஜிபோர்டு, மைக்ரோசாஃப்ட் ஸ்விஃப்ட்கீ கீபோர்ட் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.
சீனாவின் யூ-டிக்ஸ்னரிக்குப் பதிலாக ஆக்ஸ்போர்டு டிக்ஸ்னரி கூகிள் டிரான்ஸ்லேட் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.
மேலும், இந்தியாவில் மிகப் பிரபலமாக இருக்கும் டிக்டாக் செயலியும் தடைசெய்யப்பட்டுள்ளது. இதற்குப் பதிலாக சிங்காரி, டப்ஸ்மேஷ் போன்ற செயலிகளைப் பயன்படுத்தலாம்.
இதையும் படிங்க: டிக்டாக் தடை எதிரொலி : ஒரு மணி நேரத்தில் ஒரு லட்சம் பதிவிறக்கம் கண்ட இந்தியாவின் ’சிங்காரி’!