இது தொடர்பாக இந்திய செல்லுலார் ஆபரேட்டர்கள் சங்கத்தின் பொது இயக்குநர் ராஜன் எஸ் மேத்யூஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
"நிதியமைச்சரின் அறிவிப்பு, பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான உத்வேகத்தை வழங்குவதற்கும், 'தன்னம்பிக்கை' கொண்ட இந்தியாவை உருவாக்குவதற்கும் அரசாங்கத்தின் நோக்கத்திற்கு ஏற்ப அமைந்துள்ளது. சிறு, குறு தொழில்களுக்கு அளிக்கப்பட்டுள்ள சலுகைகளை வரவேற்கிறோம். அதே நேரத்தில், தொலைத் தொடர்புத் துறையின் சரக்கு சேவை வரி (ஜிஎஸ்டி) ரூ. 35 ஆயிரம் கோடியை விடுவிக்க வேண்டும்.
மேலும், பொதுத்துறை நிறுவனங்கள் பல்வேறு ஆபரேட்டர்களுக்கு செலுத்த வேண்டிய ரூ. 20 ஆயிரம் கோடி நிலுவையில் உள்ளது. ஆகவே நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறு, குறு தொழில்களுக்கு அறிவித்தது போல் இந்த தொகையையும் அறிவிக்க வேண்டும். அடுத்த சில அறிவிப்புகளின் போது, நாட்டை நிலைநிறுத்துவதற்கு பெரும் பங்களிப்பு செய்த துறைக்கு இதே போன்ற நிவாரணத்தை அளிப்பார் என்று நாங்கள் நம்புகிறோம்.
தொலைத்தொடர்பு துறை ஏற்கனவே ரூ. 7.7 லட்சம் கோடி நிதி அழுத்தத்தில் உள்ளது. இது தொடர்ந்தால் நிறுவனங்களுக்கு நிச்சயமற்ற நிலைமை ஏற்படும்". இவ்வாறு அந்த அறிக்கையில் மேத்யூஸ் கூறியுள்ளார்.
சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான முதல் நிவாரணத் தொகையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த செவ்வாய்க்கிழமை (மே 12) அறிவித்தார். மேலும், படிப்படியாக மற்ற துறைகளுக்கான வழிகாட்டுதல்களை அவர் தொடர்ந்து வெளியிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.