அப்பாடா என்று இன்று பெருமூச்சுவிட்டனர், பங்குச்சந்தை ஆர்வலர்கள். தொடர்ந்து, உலகப்பங்குச்சந்தைகள் சரிவையே சந்தித்து வந்த காரணமாக, இந்தியப் பங்குச்சந்தைகளிலும் பலத்த அடி விழுந்து கொண்டே இருந்தன. ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் பதற்றம் முடிவிற்கு வந்துவிடும் என காத்து இருந்தவர்கள் பொறுமை இழந்து, வருவது வரட்டும் என களத்தில் குதித்தனர். அதற்குக் காரணம் வரிசையாக இறக்கை கட்டி வெளியான செய்திகள்.
அமெரிக்க அதிபர் பைடன் ரஷ்யாவில் இருந்து, இனி கச்சா எண்ணெய் எரிபொருட்கள் இறக்குமதி செய்யப்போவதில்லை என அறிவித்ததைத் தொடர்ந்து இங்கிலாந்தும் அறிவித்துள்ளது. இதனைதொடர்ந்து பெப்சி, கோ கோ, சோமோட்டோ போன்ற நிறுவனங்களும் தங்களுடைய விற்பனை அங்காடிகளை ரஷ்யாவில் மூடப்போவதாக அறிவித்தன.
புத்துயிர் ஊட்டிய புதிய செய்திகள்
இந்தியாவின் ரிலையன்ஸ் நிறுவனம் பெட்ரோல், டீசல் எரிபொருட்களை ஐரோப்பாவிற்கு சப்ளை செய்ய முன்வந்துள்ளது. இதற்காக, இந்த மாதம் தொடங்கி சுமார் மூன்று வாரங்களுக்கு ஜாம்நகரில் உள்ள கச்சா எண்ணெய் செயலாக்க அலகு ஒன்றை மூடத் திட்டமிட்டிருந்தது. ஆனால், அது இப்போது செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்ற செய்தியை ப்ளூம்பெர்க் வெளியிட்டது.
நீண்ட கால முதலீட்டாளர்கள் நுழைவதற்கு சந்தைத் திருத்தம் ஒரு நல்ல வாய்ப்பு. ரஷ்யாவின் படையெடுப்பு கடந்த கால புவிசார் அரசியல் நெருக்கடிகளிலிருந்து வேறுபட்டது என ஐசிஐசிஐ புருடென்ஷியல் ஏஎம்சி, எஸ்.நரேன் தெரிவித்த கருத்து ஆகிய செய்திகள் சந்தைக்கு புத்துயிர் ஊட்டின.
லாபம் பார்த்த பங்குகள்
ரஷ்யாவின் எண்ணெய், நிலக்கரிக்கு அமெரிக்கா, இங்கிலாந்து தடை விதித்துள்ளதால், உலகளாவிய கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 300 டாலராக உயரக்கூடும் என்று எச்சரிக்கை வந்ததையெல்லாம் ஒரு பொருட்டாகவே சந்தை கருதவில்லை.
உக்ரைன்-ரஷ்யா போர் நெருக்கடியால் 49 நிறுவனங்களின் பங்கு வெளியீடுகள் ஒப்புதல்கள் இருந்தபோதிலும் செபி தாமதப்படுத்துகிறது. இதுவரை, அதானி வில்மர், வேதாந்த் ஃபேஷன்ஸ் மற்றும் ஏஜிஎஸ் டிரான்சாக்ட் டெக்னாலஜிஸ் ஆகியன 2022ல் ஐபிஓ மூலமாக ரூ. 7,400 கோடிக்கு மேல் திரட்டியது குறிப்பிடத்தக்கது.
இன்றைய வர்த்தகத்தின் இறுதியில் சென்செக்ஸ் 1,223 புள்ளிகள் உயர்ந்தும், நிஃப்டி 332 புள்ளிகள் உயர்ந்தும் முடிந்தன. நிஃப்டி 16, 300க்கு மேல் முடிந்திருப்பது நல்ல விஷயமாகப் பார்க்கப்படுகிறது. இன்றைய வர்த்தகத்தில் பெரும்பாலான பங்குகள் அள்ளிக்கொடுத்தன என்றே சொல்ல வேண்டும்.