கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் கச்சா எண்ணெயின் தேவை முன்னெப்போதும் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத அளவுக்குச் சரிந்து 0 டாலருக்கு கீழ் வர்த்தகமாகியது.
அதன் எதிரொலியாக இன்றைய வர்த்தகம் தொடங்கியது முதல் இரு இந்தியப் பங்குச் சந்தைகளும் கடும் சரிவைச் சந்தித்தன. இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,011.29 புள்ளிகள் குறைந்து 30,636.71 புள்ளிகளில் நிறைவடைந்தது. அதேபோல தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி 280.40 புள்ளிகள் குறைந்து 8,981.45 புள்ளிகளில் தனது வர்த்தகத்தை நிறைவு செய்தது.
இன்றைய வர்த்தகத்தில் வங்கி, ஐடி, ஆட்டோமொபைல் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவைச் சந்தித்தன. இன்டஸ்இண்ட் வங்கியின் பங்குகள் அதிகபட்சமாக 12 விழுக்காடு வரை சரிவைச் சந்தித்தது. அதேபோல பஜாஜ் பைனானஸ், ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி, எம் & எம், டாடா ஸ்டீல், ஓஎன்ஜிசி மற்றும் மாருதி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன.
அதேநேரம் பாரதி ஏர்டெல், ஹீரோ மோட்டோகார்ப், நெஸ்லே இந்தியா ஆகிய நிறுவனங்களின் பங்குகளின் விலை ஏற்றத்தைக் கண்டன.
சர்வதேச அளவிலும் ஷாங்காய், ஹாங்காங், டோக்கியோ, சியோல் பங்குச் சந்தைகள் பெரும் சரிவைச் சந்தித்துள்ளன. ஐரோப்பிய நாடுகளின் பங்குச் சந்தை 2 விழுக்காடு வரை குறைந்தன. அதேபோல கச்சா எண்ணெயின் விலையும் வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.
இதையும் படிங்க: ஆன்லைன் கல்வி: லேனோவாவின் புதிய முயற்சி