சீனா - அமெரிக்கா இடையே மீண்டும் பிரச்னை, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருதல், பெங்களூரு, பிகார் மற்றும் உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஊரடங்கு ஆகிய நடவடிக்கையால் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டன.
இதன் எதிரொலியாக இன்று (ஜூலை14) பங்குச் சந்தைகளில் வர்த்தகம் பலத்த சரிவைச் சந்தித்தது.
பங்குகளின் ஏற்ற இறக்கங்கள்
டாக்டர் ரெட்டீஸ் லெபாரட்டரீஸ், டைடன் கம்பெனி, பார்தி ஏர்டெல் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின. இண்டஸ் இண்ட் பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், ஜி எண்டர்டெயின்மெண்ட், ஈஷர் மோட்டார்ஸ், மாருதி சுசூகி போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாயின. கடந்த சில நாள்களாக பயங்கரமாக விலை அதிகரித்த ரிலையன்ஸ் கூட இன்று விலை சரிந்து வர்த்தகமானது.
பங்குச் சந்தை
இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 660.63 புள்ளிகள் சரிந்து 36,033.06 புள்ளிகளில் வர்த்தகமானது.
தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 195.35 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 10,607.35 புள்ளிகளில் நிறைவுற்றது.
ரூபாயின் மதிப்பு
நேற்று ரூ.75.19 காசுகளாக நிலைப்பெற்றிருந்த டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 24 காசுகளை இழந்து ரூ.75.45 காசுகளாக இருந்தது.
கச்சா எண்ணெய் விலை
பொருள் வணிகச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தற்போதைய நிலவரப்படி 32 புள்ளிகளை இழந்து 3023 ரூபாயாக இருந்தது.