டெல்லி: பணமதிப்பிழப்பு செய்யப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் அதிகரித்த போதிலும், பொருளாதார வளர்ச்சியின் வேகம் மந்தமாக உள்ளது.
அதே நேரத்தில் புழக்கத்தில் உள்ள நோட்டுகளின் எண்ணிக்கை நிலையான அதிகரிப்பைக் கண்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தரவுகளின்படி, நவம்பர் 4, 2016 நிலவரப்படி புழக்கத்தில் இருந்த நோட்டுகள் ரூ.17.74 லட்சம் கோடியிலிருந்து, அக்டோபர் 29, 2021 வரை ரூ.29.17 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. புழக்கத்தில் இருந்த நோட்டுகள் ரூ.2,28,963 கூடுதலாக அதிகரித்துள்ளது. இதுவே அக்டோபர் 30, 2020 நிலவரப்படி ரூ.26.88 லட்சம் கோடியாக இருந்தது.
மேலும், புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளின் மதிப்பு மற்றும் அளவு 2019-20ல் முறையே 14.7 விழுக்காடு மற்றும் 6.6 விழுக்காடாக அதிகரித்து, 2020-21ல் 16.8 விழுக்காடு மற்றும் 7.2 விழுக்காடாக அதிகரித்துள்ளது.
மேலும், டெபிட்/கிரெடிட் கார்டுகள், நெட் பேங்கிங் மற்றும் யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) போன்ற டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அதிகரித்துள்ளது. நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) படி, நாட்டில் UPI வாயிலாக பணம் செலுத்தும் முறை வேகமாக அதிகரித்து வருகிறது.
நவம்பர் 8, 2016 அன்று நள்ளிரவு முதல் புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இந்த முடிவின் முக்கிய நோக்கம் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிப்பதும் கருப்புப் பணத்தை ஒழிப்பதும் ஆகும் என்று அவர் தெரிவித்தார்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட 2016ஆம் ஆண்டு நாடு முழுவதும் 6.32 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. 2019ஆம் ஆண்டில் 25 கோடி ரூபாய் மதிப்புள்ள 2,87,404 ரூபாய் நோட்டுகளுடன் ஒப்பிடும்போது, 2020 ஆம் ஆண்டில் 92 கோடி ரூபாய் மதிப்புள்ள 8,34,947 போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட நோட்டுகளில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் (ரூ. 83.6 கோடி மதிப்புள்ள கள்ள நோட்டுகள்), அதைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசம் (ரூ. 3.9 கோடி), மேற்கு வங்கத்தில் (ரூ. 2.4 கோடி) உள்ளன. தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) வழங்கிய தரவுகளின்படி, 2020 ஆம் ஆண்டில் போலி இந்திய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் 2019ஆம் ஆண்டை விட 190.5 விழுக்காடு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பொருளாதாரத்தை ரிவர்ஸ் கியர் போட்டு செலுத்தும் பிரதமர் - ராகுல் காந்தி காட்டம்