கரோனா பாதிப்புக் காரணமாக 'ரியல் எஸ்டேட்' எனப்படும் மனை வர்த்தகத்துறை கடுமையான பாதிப்புகளைச் சந்தித்தது. திடீரென பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால், கட்டுமான நிறுவனங்கள் உரிய நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு வீடுகளை வழங்க முடியவில்லை. பல இடங்களில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில புலம்பெயர் கூலித்தொழிலாளர்கள் சொந்த ஊர்களை நோக்கிப் படையெடுத்தனர். இதனால் கட்டுமானங்கள் ஆங்காங்கே நின்று போனது. அதனை முடிப்பதற்குக் கூடுதல் செலவு ஏற்பட்டது.
இந்த காலத்தில் ரியல் எஸ்டேட் துறை டிஜிட்டல் தொழில் நுட்பங்களை பயன்படுத்தத் தொடங்கியது. வீடு வாங்குபவர்களிடம் கட்டுமானத் திட்டங்கள் முதலியவற்றை இணையதளம் வாயிலாக காண்பித்தனர்.
கரோனா தொற்று ரியல் எஸ்டேட் துறையைப் புரட்டிப் போட்டாலும் தற்போது இயல்பு நிலை திரும்பியதுள்ளது என்கிறார்கள், கட்டுமான நிறுவன அதிபர்கள். 2020ஆம் ஆண்டில் தொழில் வளர்ச்சி அடையாவிட்டாலும், 2019ஆம் ஆண்டுக்கு நிகரான வணிகம் நடைபெற்றுள்ளது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
இந்தாண்டு ரியல் எஸ்டேட் துறை செயல்பாடு சிறப்பாக இருக்கும் என எதிர்பார்ப்பதாக ரியல் எஸ்டேட் துறையினர் நம்பிக்கைத் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக ரியல் எஸ்டேட் தொழில் கூட்டமைப்பான கிரடாய் தமிழ்நாடு((CREDAI (Confederation of Real Estate Developers’ Association of India)) தலைவர் ஸ்ரீதரன் பேசுகையில் , "2020ஆம் ஆண்டு தொடக்கத்தில் ரியல் எஸ்டேட் தொழில் சிறப்பாக இருந்தாலும், மார்ச் மாதத்தில் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்ததும் எங்கள் துறை கடுமையான பாதிப்பைச் சந்தித்தது. ஆரம்ப காலத்தில் தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட சில பிரச்னைகளை சந்தித்தாலும் பின்னர் நிலைமை சீராகத் தொடங்கியது.
ஞாயிறு ஊரடங்கு முடிவடைந்தபின் மக்கள் வழக்கம்போல் கட்டுமானப் பகுதியை நேரில் பார்வையிடத் தொடங்கியுள்ளனர். நீண்ட நாட்களாக விற்பனை செய்யப்படாமல் இருந்த வீடுகள் தற்போது விற்பனையாகியுள்ளது. ஊரடங்கு சமயத்தில் இருந்து கட்டுமானப் பணியாளர்கள் பற்றாக்குறை பிரச்னை தற்போது சரியாகியுள்ளது.
தற்போது எங்கள் முன் இருக்கும் மிகப்பெரிய சவாலே கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வுதான். எஃகு விலை கடந்த 9 மாதங்களில் 100 மடங்கு உயர்ந்துள்ளது. சிமென்ட் விலை கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 100 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
கட்டுமானப் பொருட்களின் விலை ஏற்றத்தை அரசு கட்டுப்படுத்தாவிட்டால், இது மக்களை கடுமையாகப் பாதிக்கும். மேலும், கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ரியல் எஸ்டேட் துறையை மீட்க மத்திய அரசு ஜிஎஸ்டி உள்ளீட்டு வரிப் பலன்களை திரும்பத் தர வேண்டும். இது எங்களது நீண்ட நாள் கோரிக்கை. அதேபோல், மலிவு விலை வீடுகளுக்கான உச்ச வரம்பு 45 லட்ச ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஒவ்வொரு நகரத்துக்கும் மாறுபடும் என்பதால், இதனை உயர்த்த வேண்டும் எனக்கோரி வருகிறோம். தமிழ்நாட்டில் முத்திரைத்தாள் வரியைக் குறைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். அண்மையில், மஹாராஷ்டிராவில் முத்திரைத் தாள் வரி 2 விழுக்காடாக குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு வீடு விற்பனை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் அரசுக்கு இழப்பு ஏற்படவில்லை.
பல்வேறு மாநிலங்களும் இதனைக் குறைத்துள்ள நிலையில், தமிழ்நாடு அரசும் முத்திரைத்தாள் வரியைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம் வாடிக்கையாளர்கள் பயன்பெறுவர் எனத்தெரிவித்துள்ளோம். இது குறித்து பரிசீலிப்பதாக தமிழ்நாடு அரசு பதிலளித்துள்ளது.
நிலத்துக்கான வழிகாட்டு மதிப்பீட்டை குறைக்க வேண்டுமா என அரசு தரப்பில் கேட்கப்பட்டது. ஆனால், அது தேவையில்லை எனத் தெரிவித்துள்ளோம்.
வீட்டிலிருந்து வேலை செய்யும் நடைமுறை இருப்பதால், அலுவலக கட்டுமானங்கள் சற்று சுணக்கம் அடைந்துள்ளன. ஆனால், வீட்டிலிருந்து பணியாற்றுவதால் பலருக்கும் மன உளைச்சல் ஏற்படுகிறது. பலரும் சிரமத்துடன் பணியாற்றுகின்றனர். கரோனா தடுப்பூசி பரவலாகக் கிடைத்து, தொற்று பாதிப்பு குறைந்ததும் மீண்டும் அலுவலகத்திலிருந்து பணியாற்றுவது வழக்கம் போல் நடைமுறைக்கும் வரும். அப்போது அலுவலக கட்டுமானத் துறை மீளும்.
தமிழ்நாடு அரசு முத்திரைத் தாள் வரியைக் குறைக்க வேண்டும் என்பது தான் தங்களது பிரதான கோரிக்கை என கோவையைச் சேர்ந்த ஸ்ரீவாரி பிராப்பர்ட்டீஸ் பங்குதாரர் ராஜேஷ் லுன்ட் கூறினார்.
"தற்போது நாட்டிலேயே அதிக அளவிலாக தமிழ்நாட்டில் 11 விழுக்காடு முத்திரைத் தாள் வரி வசூலிக்கப்படுகிறது. அதனை 5 விழுக்காடாகக் குறைத்தால் 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள வீடு வாங்குபவர்களுக்கு 3 லட்ச ரூபாய் வரை சேமிப்பாகும். இதனால், வீடு விற்பனை அதிகரித்து அரசு வருவாயும் உயரும். அதேபோல், பெண்களுக்கு முத்திரைத் தாள் வரியை 4 விழுக்காடாகக் குறைக்க வேண்டும்.
கரோனா பாதிப்பு ஏற்பட்டாலும்கூட ஜூன் மாதத்திலிருந்து ரியல் எஸ்டேட் துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆகஸ்ட் மாதம் முதல் வீடு விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது.
ஆனால், பணியாளர் பற்றாக்குறை பெரும்பிரச்னையாக உள்ளது. இதனால் கட்டுமானப் பணிகளை முடிப்பதில் தாமதமாகிறது. 100 நபர்கள் தேவைப்படும் இடத்தில் 80 நபர்கள் தான் கிடைக்கிறார்கள். எஃகு, சிமென்ட் விலை உயர்வும் சவாலாக அமைந்துள்ளது. இதன் காரணமாக கடந்த அக்டோபர் மாதத்தில் வீடுகள் விலை ஏற்றம் கண்டன. தற்போது அதன் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
மலிவு விலை வீடுகள், வில்லாக்கள் அதிக அளவில் விற்பனையாகிறது. கரோனாவுக்குப் பின் நடைபெற்ற ஒரு முக்கிய மாற்றமாக, பெரும் பங்களாக்களில் இருப்பவர்கள், அதனை விற்று கேட்டட் கம்யூனிட்டிகளை வாங்கி குடியேறுவது அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. பாதுகாப்பு, கூடுதல் வசதிகள் போன்ற காரணங்களால் மக்களால் இது விரும்பப்படுகிறது. ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் அதனை சரிசெய்ய ஆட்கள் இருப்பதால், அங்கு வீடு வாங்க விருப்பம் தெரிவிக்கிறார்கள்" என்றார்.