இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரெட்மி நிறுவனத்தின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டுவர பி பி கே எலக்ட்ரானிக்ஸ், ரியல்மி என்ற நிறுவனத்தை 2018ஆம் ஆண்டு உருவாக்கியது.
ஓப்போவின் இணை நிறுவனமாக உருவாக்கப்பட்ட ரியல்மிக்கு, வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்ததால் விரைவிலேயே தனி நிறுவனமாக செயல்படத் தொடங்கியது. தொடர்ந்து, இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரியல்மி அசுர வளர்ச்சியடைந்தது.
இந்நிலையில், கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதல் காரணமாக சீன நிறுவனங்கள் மீதான எதிர்ப்பு இந்தியாவில் சமீபத்தில் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தாங்கள் இந்தியாவுக்கு நெருக்கமானவர்கள் என்பதைக் காட்டிக் கொள்ள ரெட்மி, ரியல்மி ஆகிய இரு நிறுவனங்களும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
அதன்படி நேற்று (ஆக. 19) ரியல்மி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் வெளியீட்டு விழாவில் பேசிய அந்நிறுவனத்தின் சிஇஓ மாதவ் ஷெத், "நாங்கள் எங்கள் தயாரிப்புகளை உள்ளூரிலேயே அதிக அளவில் உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளோம்.
இந்தியாவில் இந்த ஆண்டு இறுதிக்குள் 10 ஆயிரம் பேருக்கு புதிதாக வேலைவாய்ப்பு அளிக்கப்படும். அதேபோல, இந்தியாவில் உள்ளூர் தொழிற்சாலைகளைத் திறக்கவும், நமது நாட்டின் பொருளாதாரத்திற்கு அதிக பங்களிப்பை அளிக்கவும் தேவையான விநியோகஸ்தர்களுடன் ஒப்பந்தைகளையும் மேற்கொண்டு வருகிறோம்" என்றார்.
மேலும், இந்த ஆண்டு இறுதிக்குள் மூன்று கோடி ஸ்மார்ட்போன்களையும், 80 லட்சம் AIOT சாதனங்களையும் விற்பதே தங்கள் இலக்கு என்றும் அவர் தெரிவித்தார்.
நேற்று ரியல்மி சார்பில், 8,999 ரூபாய்க்கு ரியல்மி சி 12 என்ற ஸ்மார்ட்போனும், 10,999 ரூபாய்க்கு ரியல்மி சி 15 என்ற ஸ்மார்ட்போனும் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இந்தியாவில் ஒரே மாதத்தில் ஐம்பது லட்சம் பேர் வேலையிழப்பு!