மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் பஞ்சாப்-மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் வர்த்தகம் செய்துவருகிறது. இந்த வங்கியின் வைப்புத்தொகை சுமார் 11 ஆயிரம் கோடி ரூபாயாகவும், கடன் பரிவர்த்தனைத் தொகை சுமார் 8 ஆயிரம் கோடியாகவும் உள்ளது. தலைநகர் டெல்லி உள்பட நாடு முழுவதும் 137 கிளைகள் இந்த வங்கிக்கு உள்ளது.
இந்த வங்கியின் நிதி நிர்வாகத்தில் பெரியளவில் முறைகேடு நிகழ்ந்துள்ளதாக அண்மையில் குற்றச்சாட்டு எழுந்தது. குற்றச்சாட்டை விசாரித்த ரிசர்வ் வங்கி, பஞ்சாப்-மகாராஷ்டிரா வங்கியின் வர்த்தக நடவடிக்கைகளுக்கு முற்றிலுமாகத் தடைவித்துள்ளது.
இதன்மூலம் வங்கி கடன் கொடுப்பதோ, முக்கிய வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதோ இயலாது. அத்துடன் வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்கிலிருந்து ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இந்த தடைக்காலமானது ஆறு மாதத்திற்கு நீடிக்கும் எனவும் ரிசர்வ் வங்கி உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையால் 100-க்கும் மேற்பட்ட கிளைகளில் கணக்கு வைத்திருக்கு வாடிக்கையாளர்கள் பெரும் கலக்கத்தில் உள்ளனர்.
இந்நிலையில் அந்த வங்கியின் நிர்வாக இயக்குநர் ஜாய் தாமஸ், 'இந்தச் சிக்கலுக்கு நான் முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறேன். இந்தச் சிக்கல் ஆறு மாதத்துக்குள் சீராகிவிடும் என வாடிக்கையாளர்களுக்கு உறுதியளிக்கிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.