சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த சில நாட்களாகவே உயர்வை சந்தித்து வருகிறது. கரோனா பரவல் தாக்கம் காரணமாக சர்வதேச அளவில் போக்குவரத்து பெரும் முடக்கத்தைச் சந்தித்துள்ளது.
இதையடுத்து, மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்தது. குறிப்பாக அமெரிக்க சந்தையில் விலை பூஜ்ஜியத்துக்கும் கீழாக சென்றது.
தற்போது மெல்ல விமானப் போக்குவரத்து உள்ளிட்ட பொதுப் போக்குவரத்துகள் தளர்வுபடுத்தப்பட்டு வரும் நிலையில், ஈராக் அரசு முக்கிய முடிவொன்றை எடுத்துள்ளது. கடந்த மூன்று மாத காலமாக கச்சா எண்ணெய் உற்பத்தி அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளதால், ஆகஸ்ட் - செப்டம்பர் மாத காலக் கட்டத்தில் கச்சா எண்ணெய் உற்பத்தியை, நாளொன்றுக்கு நான்கு லட்சம் பேரல் வரை குறைக்கப்போவதாக ஈராக் தெரிவித்துள்ளது.
ஈராக்கின் இந்த முடிவு காரணமாக சர்வதேச சந்தையில் விலை உயர்வு ஏற்படும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த மூன்று மாதத்திற்கு முன்னர் கச்சா எண்ணெய் சுமார் 30 டாலருக்கு விற்பனையாகி வந்த நிலையில், தற்போது விலை 40 டாலரைத் தாண்டி விற்பனையாகி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஏற்றத்தில் இந்திய பங்குச்சந்தை!