கரோனா தொற்று பாதிப்பிலிருந்து மீள சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு மூன்று லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் கடன் உத்தரவாத திட்டம் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுவருகிறது.
ஆனால், கரோனா தொற்றால் மிகப் பெரிய பாதிப்புகளை சந்தித்துள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், தங்களுக்கு கடனைத் தவிர்த்து மேலும் சில சிறப்பு சலுகைகள் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றன.
இது குறித்து ஈடிவி பாரத்திடம் பேசிய டான்ஸ்டியா என்று அழைக்கப்படும் தமிழ்நாடு சிறு, குறு நிறுவனங்கள் கூட்டமைப்பின் கூடுதல் செயலர் வாசுதேவன், "சில இடங்களில் தேவை இருந்தாலும் தேவையான தொழிலாளர்கள் கிடைப்பதில் சிரமம் உள்ளது. போக்குவரத்து முடக்கம், இ-பாஸ் நடைமுறையும் சிக்கிலானதாக உள்ளது. ஓட்டுமொத்தமாக வணிக சங்கிலி தொடரே (சப்லை செயின்) பாதிப்படைந்துள்ளது.
மூலப் பொருள்களையும் வாங்க முடியவில்லை, உற்பத்தி செய்த பொருள்களையும் கொண்டு சேர்க்க முடியவில்லை. இங்குள்ள தொழில் நிறுவனங்கள் வெறும் 40 விழுக்காடு அளவுடன் செயல்பட்டு வருகின்றன. மோசமான பொருளாதார சூழல் நிலவுவதால் பெரு நிறுவனங்களும் தங்கள் உற்பத்தியை குறைத்துள்ளன.
இதனால் அவர்களை நம்பியிருக்கும் சிறு, குறு நிறுவனங்களும் பாதிப்படைந்துள்ளன. இந்த மாதத்துடன் ரிசர்வ் வங்கி அறிவித்த கடன்களுக்கான அசல் மற்றும் வட்டியை திரும்ப செலுத்தும் காலம் முடிவடைந்துவிட்டது. ஆனால் பல நிறுவனங்கள் இன்னும் மோசமான சூழலையே எதிர்கொண்டுள்ளன.
அரசு அறிவித்த அவசர கடன் உத்தரவாத திட்டம் சற்று பலனளித்தாலும், பிப்ரவரி 29ஆம் தேதியில் நிறுவனங்கள் வைத்திருந்த கடனின் அடிப்படையிலேயே புதிய கடன்கள் வழங்கப்படுகின்றன. ஆனால், பெருவாரியான நிறுவனங்களுக்கு அதற்கு அடுத்த சில மாதங்களில்தான் நிதிப்பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் குறைவான கடன் தொகையைதான் பெற முடிகிறது" என்றார்.
ரிசர்வ் வங்கி ரெப்போ விதிதத்தை குறைந்தாலும் வங்கிகளும், வங்கி சாரா நிதி நிறுவனங்களும் தொழில் நிறுவனங்களுக்கு அதிக வட்டியில் கடன் வழங்குவதாகவும் உற்பத்தியாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதனை அரசும், ரிசர்வ் வங்கியும் வரைமுறைப்படுத்த வேண்டும், நிறுவனங்களின் கடன்களை வாராக்கடன்களாக அறிவிப்பதையும், கடனை திரும்ப செலுத்தாத நிறுவனங்களின் சொத்துக்களை கைப்பற்ற சர்ஃபாசி சட்ட நடைமுறைகளை பின்பற்றுவதையும் தற்காலிகமாக நிறுத்த வேண்டும் எனவும் தொழில்துறையினர் அரசிடம் வேண்டுகோள் விடுக்கின்றன.
சிறு, குறு நிறுவனங்களுக்கு பெரு நிறுவனங்கள் கொடுக்க வேண்டிய தொகை பல நாள்களாக நிலுவையில் உள்ளது. நிதிப்பிரச்னையை இது மேலும் சிக்கலாக்குவதாக வாசுதேவன் கூறுகிறார்.
இது குறித்து பேசிய அவர், "பெரு நிறுவனங்களிடம் இருந்தும், அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களிடம் இருந்தும் கிடைக்க வேண்டிய பணம் நீண்ட நாள்களாகியும் வராவிட்டால் சிறு, குறு நிறுவனங்கள் தேசிய நிறுவன சட்ட தீர்பாயத்தை அணுக முடியும்.
முன்பு ஒரு லட்ச ரூபாயாக இருந்த உச்ச வரம்பை தற்போது 1 கோடி ரூபாயாக உயர்த்தியுள்ளார்கள். சிறு, குறு நிறுவனங்கள் 40 லட்ச ரூபாய் மதிப்பில்தான் தொழில் செய்துவருகின்றனர். இதனால் பெரு நிறுவனங்களிடம் இருந்து நிலவைத் தொகையைப் பெற முடியாமல் சிரமத்துக்கு ஆளாகின்றன.
முன்பு 45 நாள்களில் பணத்தை திரும்பச் செலுத்தி வந்த பெரு நிறுவனங்கள், தற்போது ஆறு மாதம் முதல் எட்டு மாதத்துக்குப் பிறகு ஆர்டர்களுக்கு பணத்தை திரும்பச் செலுத்துகிறார்கள். ஆனால் நாங்கள் 90 நாள்களில் கடனை திரும்பச் செலுத்த முடியாவிட்டால் வாராக்கடனாக அறிவித்துவிடுகிறார்கள்.
கரோனா காரணமாக பாதிக்கப்பட்டு நிறுவனங்களுக்கு அரசு வெறும் கடனுதவி மட்டும் செய்யாமல் வரிச் சலுகைகள் வழங்க வேண்டும். சீனா, துருக்கி போன்ற ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு சிறப்பு மானியம் வழங்க வேண்டும், வரிச் சலுகைகள் வழங்க வேண்டும். அதேபோல் அதிக தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் நிறுவனங்களுக்கும் அரசு சலுகை வழங்க வேண்டும்" என்றார்.
ஆர்டர்கள் கிடைத்தாலும் பணியாட்கள் இல்லாததால் பணிகள் தேக்கமடைந்துள்ளதாக கூறுகிறார் காக்லூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்க செயலர் பாஸ்கரன்.
இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், "நாட்டிலேயே நம் மாநிலத்துக்கு மட்டும்தான் ரயில் சேவை இல்லை. போக்குவரத்து முடக்கத்தால் பணிக்கும் திரும்ப விரும்பும் வட மாநிலத் தொழிலாளர்களால் வரமுடியவில்லை. தற்போது ஓரளவுக்கு ஆர்டர்கள் கிடைக்கிறது.
ஆனால் அடுத்த மாதம் முதல் கடன்களை திரும்ப செலுத்த வேண்டும். இதனால் பணப்புழக்கம் இல்லாமல் போய்விடும். கரோனா காரணமாக போடப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும்" என்றார்.