இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரயில்வே வாரிய தலைவர் வி.கே. யாதவ், "அடுத்த நான்காண்டுகளில் டெல்லி-மும்பை ரயில் பாதையையும் டெல்லி-ஹவுரா ரயில் பாதையையும் 160 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடிய அளவுக்குத் தரம் உயர்த்தவுள்ளோம்.
கிழக்கு சிறப்புச் சரக்கு ரயில் பாதையும் மேற்கு சிறப்புச் சரக்கு ரயில் பாதையின் கட்டுமான பணிகளும் வரும் 2021ஆம் ஆண்டுக்குள் முடிவடையும். இந்தக் கட்டுமான பணிகள் முடிவடைந்ததும் அதிக தனியார் நிறுவனங்களுக்கு ரயில்வே துறையில் வாய்ப்பளிக்க முடியும்" என்றார்.
ரயில்வே துறையில் தனியார் நிறுவனங்களை அனுமதிக்க இந்த யோசனைக்குப் பல தனியார் நிறுவனங்கள் ஆதரவளித்துள்ளதாகத் தெரிவித்தவர், வரும் அக்டோபர் மாதம் ஐ.ஆர்.சி.டி.சி. (IRCTC)ஆல் முதல் தனியார் ரயில் இயக்கப்படும் எனவும் அதைத் தொடர்ந்து மும்பை - அகமதாபாத் பாதையில் நவம்பர் மாதம் இரண்டாவது தனியார் ரயில் இயக்கப்படும் என்று கூறினார்.
ரயில் பெட்டிகளைத் தயாரிப்பது, பராமரிப்பது போன்ற பணிகள் ரயில்வே துறையால் முன்னெடுக்கப்படும் என்றும் மற்ற சேவைகளான டிக்கெட்டிங், பொழுதுபோக்கு உள்பட சேவைகள் தனியார் நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் என்றார்.
மேலும் சீனாவைப் போல ரயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலைகளையும் தனியார் துறைக்கு வழங்குவது குறித்துச் சிந்தித்து வருவதாகவும் ரயில்வே துறையின் வருவாயை இதுபோன்ற நடவடிக்கைகள் மூலமே அதிகரிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
ராய் பரேலி ரயில் தொழிற்சாலையை தனியார்மயமாக்கல் செய்யும் அரசின் யோசனைக்கு ரயில்வே தொழிலாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்புக் கிளம்பியது குறிப்பிடத்தக்கது.