ஜாக் மா என்றாலே நீண்ட நாள்களுக்குப் பிறகு உலக பணக்காரர் பட்டியலில் பில் கேட்ஸைப் பின்னுக்குத் தள்ளியவர் என்பதுதான் அனைவருக்கும் முதலில் ஞாபகத்திற்கு வரும்.
அலிபாபா நிறுவனம் மூலம் மிகப்பெரிய உச்சத்தைத் தொட்ட ஜாக் மா, 1999ஆம் ஆண்டு தனது நண்பர்களுடன் இணைந்து அலிபாபா என்ற மிகச்சிறிய வர்த்தக நிறுவனத்தை பத்திற்கு பத்து ரூமில் தொடங்கினார்.
மிகக் குறுகிய காலத்திலேயே அலிபாபா நிறுவனம் உலகம் முழுவதும் விரிவடைய தொடங்கியது. அவ்வாறு இருக்க 2013 மே 10ஆம் தேதி அலிபாபா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவலர் பொறுப்பிலிருந்து விலகுவதாக மா அறிவித்தார்.
பின்னர் அலிபாபா குழுவில் உறுப்பினராகப் பணியாற்றிவந்த ஜாக் மா, கடந்தாண்டு அந்தப் பதவியிலிருந்தும் விலகினார்.
இந்நிலையில், சாஃப்ட்பேங்க் குழுமத்தின் குழுவிலிருந்தும் ஜாக் மா விலகுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. கிட்டத்தட்ட 13 ஆண்டுகளாக சாஃப்ட்பேங்க் குழுமத்தில் பணியாற்றிவந்த ஜாக் மா, பொது வாழ்க்கையில் அதிகம் கவனம் செலுத்த விரும்புவதால் தனது அனைத்து பதவிகளிலிருந்தும் விலகுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் ஜாக் மா விலகலுக்கான காரணத்தை அதிகாரப்பூர்வமாக சாஃப்ட்பேங்க் அறிவிக்கவில்லை என்பது நோக்கத்தக்கதாகும்.
இதையும் படிங்க: பொருளாதார அறிவிப்பின் பலன்களும், பற்றாக்குறையும்