நாட்டின் விமான போக்குவரத்து நிறுவனங்கள் சில ஆண்டுகளாகவே பல்வேறு சிக்கல்களைச் சந்தித்துவருகிறது. விஜய் மல்லையாவின் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் தொடங்கி, ஏர் இந்தியா, ஜெட் ஏர்வேஸ் ஆகியவை நிர்வாகம் மற்றும் நிதி சிக்கலில் சிக்கி பெரும் சர்ச்சைக்குள்ளானது.
இந்நிலையில், நாட்டின் மிகப்பெரிய விமான போக்குவரத்து நிறுவனமான இன்டிகோவில் தற்போது சர்ச்சை வெடித்துள்ளது. அந்நிறுவனத்தின் இணை நிறுவனரும், சக பங்குதாரரான ராகேஷ் கங்க்வால், இன்டிகோ நிறுவனத்தில் மிகப்பெரிய அளவில் நிதிநிர்வாகத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் குற்றம்சாட்டினார்.
இன்டிகோ நிறுவனத்தின் மற்றொரு இணை நிறுவனரான ராகுல் பட்டியாவுக்கும், ராகேஷ் கங்க்வாலுக்கும் இடையே நிறுவனத்தின் நிதி நிர்வாகம் குறித்து கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் வெளிப்பாடாகவே இந்த பிரச்னை தற்போது வெடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் செ.பி.(SEBI) அமைப்பு தலையிட்டு குற்றச்சாட்டுத் தொடர்பாக விசாரிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளது. ஏற்கனவே விமானப்போக்குவரத்து நிறுவனங்கள் தொடர் சிக்கலைச் சந்தித்துவருகின்றன. இந்நிலையில், இன்டிகோவில் வெடித்துள்ள இந்த பிரச்னையானது இத்துறைச் சார்ந்தவர்களை பெரும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.