டெல்லி : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.20 குறைந்து ரூ.4,406 ஆக விற்பனையானது. அந்த வகையில் ஒரு சவரன் (8 கிராம்) தங்கத்தின் விலை ரூ.35 ஆயிரத்து 248 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வெள்ளியை பொறுத்தவரை ஒரு கிராம் 20 காசுகள் வரை குறைந்து ஒரு கிலோ ரூ.72 ஆயிரத்து 900 ஆக உள்ளது. உள்ளூர் சந்தைகளில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தொடர் சரிவுக்கு சர்வதேச நிகழ்வுகள் காரணங்களாக உள்ளன. இதற்கிடையில் தங்கத்தின் இறக்குமதி நிகழாண்டின் ஏப்ரல்-மே காலகட்டத்தில் 691 கோடி டாலராக உயர்ந்துள்ளது.
வெள்ளி இறக்குமதி சரிவு
அதேநேரம் வெள்ளி இறக்குமதி 206 கோடி டாலர் வரை குறைந்துள்ளது. அந்த வகையில் வெள்ளி இறக்குமதி 2.75 கோடி டாலராக உள்ளது. இது கடந்த காலத்துடன் ஒப்பிடும்போதும் 93.7 சதவீதம் சரிவாகும்.
இதேபோல் நவரத்தினங்கள் ஏற்றுமதியும் 634 கோடி டாலராக உயர்ந்துள்ளது. நாட்டில் ஆபரணத் தங்கத்தின் இறக்குமதி அதிகரிப்புக்கு பல்வேறு காரணங்கள் இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். பெரும்பாலும் இந்தியர்கள் தங்கத்தில் முதலீடு செய்கின்றனர் என்ற கருத்தையும் அவர்கள் முன்வைக்கின்றனர்.
அமெரிக்கா நடவடிக்கை
இந்தியாவை பொருத்தவரை ஆண்டுக்கு 800-900 கோடி டன் வரை தங்கத்தை இறக்குமதி செய்கிறது. இதற்கு மத்தியில் கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத வகையில் தங்கத்தின் விலை நடப்பாண்டின் ஜூன் மாதத்தில் தடாலடியாக சரிந்துள்ளது என ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், “தங்கத்தின் விலை சரிவுக்கு அமெரிக்காவில் நிலவும் பணவீக்கமும் ஒரு காரணம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அமெரிக்க ரிசர்வ் வங்கி, அமெரிக்காவில் மறைமுக சொத்துகளின் விலையேற்றம் காரணமாக கடுமையாக பணவீக்கம் அதிகரிக்கும் எனக் கணித்திருந்தது.
இதைத்தொடர்ந்து பணவீக்கத்தை கட்டுப்படுத்துதல் மற்றும் டாலரின் மதிப்பை உயர்த்த தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதுவும் தங்கத்தின் விலை வீழ்ச்சிக்கு ஒரு காரணம் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சரிகிறதா தங்கத்தின் விலை- உண்மை என்ன?