இந்தியாவின் ஊடக மற்றும் கேளிக்கைத்துறை குறித்த தற்போதைய மதிப்பீட்டை முன்னணி மதிப்பீடு நிறுவனமான கிரிசில் (CRISIL-Credit Rating Information Services of India Limited) வெளியிட்டுள்ளது. அந்நிறுவனத்தின் இயக்குனர் நிதிஷ் ஜெயின் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் நிதியாண்டில் இந்திய ஊடகத்துறை நல்ல வளர்ச்சியைக் காணும்.
குறிப்பாக, ஐபிஎல் உள்ளிட்ட விளையாட்டுத் தொடர்கள் இந்தாண்டில் பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் ஓடிடி தளங்களுக்கு ஓராண்டில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதையடுத்து சப்ஸ்கிரிப்ஷன் மூலம் ஏற்படும் வருவாய் 24 விழுக்காடு உயர்வைச் சந்திக்கும் எனக் கணிக்கப்படுகிறது.
மேலும், விளம்பரம் மூலம் கிடைக்கும் வருவாய் 31 விழுக்காடு உயர்வைக் காணும் எனவும், ஒட்டுமொத்தமாக ஊடகம் மற்றும் கேளிக்கைத்துறை 27 விழுக்காடு வளர்ச்சியை பெற்று ரூ.1.37 லட்சம் கோடி வருவாய் ஈட்டும் எனவும் கிரிசில் நிறுவனம் கணித்துள்ளது. கோவிட்-19 முடக்கம் காரணமாக கடந்தாண்டில் ஊடகத்துறை 26 விழுக்காடு சுருக்கம் கண்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: திருவனந்தபுரத்தில் ராகுலின் திட்டம் என்ன?