இந்திய கைப்பேசி சந்தையில் சாம்சங் நிறுவனம் 24 விழுக்காடு சந்தை மதிப்பைக் கொண்டு முன்னணியில் உள்ளது. அதனைத் தொடர்ந்து சியோமி, விவோ ஆகிய நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.
இந்நிலையில், சந்தை பகுப்பாய்வு நிறுவனமான சிடிசி, இந்திய கைப்பேசி சந்தை குறித்த பகுப்பாய்வை மேற்கொண்டு முடிவுகளை வெயிட்டுள்ளது. அதன் முக்கியத் தகவல்களைக் காணலாம்.
இந்திய கைப்பேசி சந்தை 2020ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 50.6 விழுக்காடு வரை சரிவைச் சந்தித்துள்ளது. இந்த சமயத்தில் ஒரு கோடியே 82 லட்சம் கைப்பேசிகள் விற்பனையாகியுள்ளன.
விற்பனை சரிந்தபோதிலும் ஏப்ரல் - ஜூன் மாத விற்பனையில் சியோமி 29.4 விழுக்காடுடன் முதல் இடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து, சாம்சங் 26.3 விழுக்காடுடனும், விவோ 17.5 விழுக்காடுடனும், ரியல்மி 9.8 விழுக்காடுடனும், ஒப்போ 9.7 விழுக்காடுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
விலையுயர்ந்த கைபேசிகளின் இறக்குமதியும் 35 விழுக்காடு அளவு குறைந்துள்ளது. ஆனால், உயர் ரக கைப்பேசிகள் விற்பனையில் 48.8 விழுக்காடு சந்தை மதிப்பைக் கொண்டுள்ள ஆப்பிள் நிறுவனம் முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. ஐபோன் 11, ஐபோன் எக்ஸ்.ஆர் ரக கைப்பேசிகள் இந்நிறுவனத்தின் அதிக விற்பனையான கைப்பேசிகள் பட்டியலில் முன்னிலை வகிக்கிறது.
கரோனா காலத்தில் கைபேசி உற்பத்தியும் விற்பனையும் 41 விழுக்காடு அளவுக்கு சரிந்ததாக அறிக்கைகள் வெளியாகின. ஆனால் ஆண்டில் இரண்டாம் பாதியில் அது 40 விழுக்காடு அளவு வளர்ச்சி காணும் என்று சந்தை பகுப்பாய்வு நிறுவனமான ஐடிசி கணித்துள்ளது.