முன்னதாக வீடு, வாகன, தனி நபர் கடன்களுக்கான அசல் மற்றும் வட்டியை உள்ளடக்கிய மாதத் தவணை (EMI) செலுத்துவதை மூன்று மாதம் ஒத்தி வைக்க ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது. ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து வீட்டுக்கடன் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் தங்கள் கிளைகளை இயக்க அனுமதி கோரியிருந்தன.
இந்நிறுவனங்களின் கோரிக்கையை அடுத்து, கடந்த வியாழக்கிழமை, குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களுடன் கிளைகளை இயக்க மத்திய அரசு அனுமதி அளித்தது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பேசிய நேஷனல் ட்ரஸ்ட் ஹவுஸிங் ஃபினான்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அலோக் அகர்வால், "எங்கள் கிளைகளை பாதுகாப்பாக இயக்க திட்டங்கள் வகுத்து வருகிறோம். ஒரு அலுவலகத்தில் ஐந்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் இருக்க மாட்டார்கள், தனி மனித இடைவெளி பின்பற்றப்படும். வெப்பநிலை சோதனைக் கருவிகள் உபயோகிக்கப்படும். பெருமளவிலான வாடிக்கையாளர்கள் வர அனுமதிக்கப்பட மாட்டார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், சொந்தமாக வாகனங்கள் கொண்ட ஊழியர்கள் மட்டுமே அலுவலகத்திற்கு வர அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தன்னார்வ அடிப்படையில் பணிபுரிய விரும்பும் ஊழியர்களை மட்டுமே கொண்டு நிறுவனங்களை இயக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அந்தந்த மாநில அரசாங்கங்கள் பிறப்பித்துள்ள நெறிமுறைகள் பின்பற்றப்படும் என்றும், சிகப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட இடங்களில் உள்ள கிளைகள் தவிர்த்து, பிற கிளைகள் படிப்படியாக இயக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே ஊரடங்கு உத்தரவு முற்றிலுமாகத் தளர்த்தப்பட்ட பின்னர் வீட்டுக்கடன்களுக்கான தேவை அதிகரிக்கும் என அனுமானிக்கப்பட்டுள்ளது.
சொந்த வீடுகள் வாங்குவதையே மக்கள் தேர்வு செய்வார்கள் என்றும் கரோனா வைரஸ் நெருக்கடி கொண்டு வந்த மாற்றங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும் என்றும் சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் ஓய்வு பெற்ற நிர்வாக இயக்குநர் சீனிவாஸ் ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டில் பணப்புழக்கம் குறைவாகவே இருப்பதால் இலாபகரமாக இயங்கும் வீட்டுக்கடன் நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ரிசர்வ் வங்கி அறிவிப்பு எதிரொலி: இந்தியப் பங்குச்சந்தை உயர்வு!