தேயிலை விலையில் ஏற்பட்ட வீழ்ச்சியால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும்; தமிழ்நாடு அரசு பசுந்தேயிலைக்கு உடனடியாக விலை நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தேயிலை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் தேயிலை சாகுபடி முக்கியத் தொழிலாக உள்ளது. சுமார் ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவில் தேயிலை பயிரிடபட்டுள்ளது. இங்கு விளையும் பசுந்தேயிலையைப் பயன்படுத்தி ஆயிரக்கணக்கான டன், தேயிலைத் தூள் தயாரிக்கப்பட்டு வெளி மாநிலங்களுக்கும், வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இதில் சிறு, குறு விவசாயிகள் உற்பத்தி செய்யும் பசுந்தேயிலைக்கு சமீப காலங்களாகப் போதிய விலை கிடைப்பதில்லை. இதனால், தேயிலை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டுவது குறைந்து வருகிறது.
குறிப்பாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு போதிய மழை இல்லாததால் தேயிலை மகசூல் குறைந்தது. இதனால் ஒரு கிலோ பசுந்தேயிலைக்கு 16 ரூபாய் வரை விலை கிடைத்தது. அதன் பின்னர் தொடர் மழை பெய்து, பசுந்தேயிலை விளைச்சல் அமோகமாக இருந்தாலும் விலை வீழ்ச்சி காரணமாக, ஒரு கிலோ பசுந்தேயிலைக்கு 8 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை மட்டுமே கிடைக்கிறது என தேயிலை விவசாயியான அசோக் வருத்தம் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர் இந்த விலை வீழ்ச்சியால் உற்பத்தி செலவு மட்டுமே கிடைப்பதாகவும், லாபம் எதுவும் கிடைப்பதில்லை எனவும் தெரிவித்தார். எனவே, தமிழ்நாடு அரசு பசுந்தேயிலைக்கு குறைந்தப்பட்ச விலையை நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி தேயிலை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: டாஸ்மாக் ஊழியர்கள் பட்டினிப் போராட்டம்!