2021-22ஆம் ஆண்டு மத்திய நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினருமான ப. சிதம்பரம் இன்று உரையாற்றினார். மாநிலங்களவையில் பேசிய அவர், மத்திய அரசை கடுமையாகத் தாக்கி விமர்சித்தார்.
அவர் பேசியதாவது, "கடந்தாண்டு கோவிட்-19 பரவலுக்கு முன்னரே நாட்டின் நிதி நிலைமை மோசமாக ஐ.சி.யூ.வில் இருந்தது என மூத்தப் பொருளாதார வல்லுநரான அரவிந்த் சுப்ரமணியம் கூறியிருந்தார். இந்தியா இரண்டாண்டுகளாக பொருளாதார மந்தநிலையை சந்தித்துவந்தது. இந்தச் சூழலில்தான் கோவிட்-19 பெருந்தொற்று ஏற்பட்டு பொது முடக்கம் ஏற்பட்டது" என்றார்.
பணக்காரர்களுக்கான பட்ஜெட்
தொடர்ந்து, "இந்தப் பொதுமுடக்கம் காரணமாக 12 கோடிக்கும் மேற்பட்டோரின் வேலை பறிபோனதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக பெண்கள் இந்த வேலையிழப்பு காரணமாக பெரும் பாதிப்பைக் கண்டனர். இந்தச் சூழலில் மக்களின் வாங்கும் திறன் முற்றாக மோசமடைந்தது.
இந்த நிதிநிலை அறிக்கையில் ஏழை மக்கள், வேலையிழந்தோர், சிறு குறு தொழிலாளர்களுக்கு கவனம் செலுத்தி அரசுத் திட்டங்களை அறிவிக்க வேண்டும். மாறாக இவர்கள் அனைவரையும் புறக்கணித்து, நாட்டின் ஒரு விழுக்காட்டினரான, பெரும் பணக்காரர்களுக்கான நிதிநிலை அறிக்கையாக இது உள்ளது" எனப் பேசினார்.
'பணக்காரர்களால், பணக்காரர்களுக்காக, பணக்காரர்களே தயார்செய்த நிதிநிலை அறிக்கை இது உள்ளது' என்றும் குற்றம்சாட்டினார்.
கெட்டிக்காரன் பொய்
மேலும் சிதம்பரம், "நிதிநிலை அறிக்கையில் செஸ் வரியை ஏற்றிவிட்டு, பெட்ரோல் டீசல் விலை உயராது என அரசு தெரிவித்திருந்தது. ஆனால், கெட்டிக்காரன் பொய் எட்டு நாள்தான் நிற்கும் என்ற பழமொழிபோல் நிதிநிலை அறிக்கைத் தாக்கல்செய்த மூன்று நாள்களிலேயே பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளது.
மக்கள்விரோத இந்த நிதிநிலை அறிக்கையை நாங்கள் எதிர்க்கிறோம். எதிர்ப்புத் தெரிவித்தால் போராட்ட ஜீவி என எங்களை முத்திரை குத்துவீர்கள். அதைப் பற்றி கவலை இல்லை" எனக் கூறினார்.
இதையும் படிங்க: 'பாங்காங் ஏரி பகுதியில் இருதரப்பு ராணுவமும் பின்வாங்குகிறது' - ராஜ்நாத் சிங்