சர்வதேச அளவில் 2020ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கான ஸ்மார்ட்போன் விற்பனை குறித்து கவுண்டர்பாயிண்ட் என்ற நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், 2019ஆம் ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் தற்பொழுது ஸ்மார்ட்போன் விற்பனை 13 விழுக்காடு வரை குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய ஸ்மார்ட்போன் சந்தையான சீனாவில் கோவிட்-19 பாதிப்பு காரணமாகவே இந்த சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் 2014ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக்குப் பின் 300 மில்லியன் ஸ்மார்ட்போன்கள் விற்கப்படுவது இதுவே முதன்முறையாகும். இந்த சரிவு இரண்டாம் காலாண்டில் மேலும் மோசமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சாம்சங் நிறுவனம் சர்வதேச அளவில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. உலகில் தற்போது பயன்பாட்டில் உள்ள ஐந்து ஸ்மார்ட்போன்களில் ஒன்று சாம்சங் நிறுவனத்துடையது. சீனாவில் ஹூவாவே ஸ்மார்ட்போன்களின் விற்பனைத் தொடர்ந்து அதிகரித்துவருகிறது.
சர்வதேச சந்தையில் ஹூவாவே (17%) இரண்டாவது இடத்திலும் ஆப்பிள் (14%) மூன்றாவது இடத்திலும் உள்ளன. ஆப்பிள் நிறுவனத்தின் விற்பனை கடந்தாண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் ஐந்து விழுக்காடு குறைந்துள்ளது. நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தை முறையே ஜியோமி, ஓப்போ நிறுவனங்கள் பிடித்துள்ளன.
"முதல் காலாண்டின் இறுதியில் பல்வேறு நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் உற்பத்தி, விற்பனை என இரண்டும் சரிவைச் சந்தித்தன. இந்த நெருக்கடியான சூழ்நிலையில் பொதுமக்கள் புதிதாக ஸ்மார்ட்போன்களை வாங்க ஆர்வம் காட்டவில்லை. எனவே இந்த சரிவு வரும் காலங்களில் குறையும்" என்று கவுண்டர்பாயிண்ட் ஆராய்ச்சி நிறுவனத்தின் இணை இயக்குநர் தருண் பதக் தெரிவித்துள்ளார்.
மேலும், 5ஜி வசதி கொண்ட ஸ்மார்ட்போன்களில் விற்பனை எட்டு விழுக்காடு உயர்ந்துள்ளது. இருப்பினும் கோவிட்-19 தொற்று காரணமாக ஸ்பெயின், இந்தியா போன்ற நாடுகளில் 5ஜி அலைக்கற்றை ஏலம் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. இதனால் 5ஜி சேவை மக்களைச் சென்றடைவதிலும் தாமதம் ஏற்படும் என்று கவுண்டர்பாயிண்ட் ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ரிலையன்ஸ் நிறுவனத்தின் லாபம் கடும் சரிவு!