நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக பிரதமர் நரேந்திர மோடி ரூ.20 லட்சம் கோடி சிறப்பு நிதி தொகுப்புத் திட்டத்தை அறிவித்தார். இந்தத் திட்டம் குறித்த தகவல்களை செய்தியாளர்கள் சந்திப்பின்போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுவருகிறார்.
முதல்கட்டமாக சிறு குறு தொழில்கள், மின்சாரம், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் உள்ளிட்டவைகளுக்கு திட்டங்கள் அளிக்கப்பட்டது. இந்நிலையில் இரண்டாவது நாளாக நேற்று (மே 14) நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர், “புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அடுத்த இரு மாதங்களுக்கு 5 கிலோ அரிசி அல்லது கோதுமை இலவசமாக அளிக்கப்படும். அத்துடன் ஒரு கிலோ பருப்பு வகைகளும் வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம் 8 கோடி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பயனடைவார்கள். அதேபோல் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் 23 மாநிலங்களில் இந்தாண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் பொது விநியோக திட்டத்தின் கீழ் இணைக்கப்படும்.
இதனால் 67 கோடி மக்கள் பயனடைவார்கள்” என்றார். மேலும், “புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் மலிவு விலையில் வாடகை வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும். இதில் அரசு-தனியார் பங்களிப்புடன் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்” என்றார்.
இதையும் படிங்க: LIVE UPDATE: விவசாயி, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சிறுவணிகர்களுக்கு திட்டங்கள்