கோவிட்-19 தொற்று காரணமாக லட்சக்கணக்கான மக்கள் வேலையிழந்து வருகின்றனர். இருப்பினும், இந்த நெருக்கடியான காலகட்டத்திலும் அமேசான், கூகுள் போன்ற டிஜிட்டல் பெரு நிறுவனங்கள் தொடர்ந்து வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன.
பொதுவாக, இந்தியாவில் அக்டோபர் இறுதியில் தொடங்கி புத்தாண்டு வரை பண்டிகை காலங்களாக பார்க்கப்படுகிறது. இந்தக் காலகட்டத்தில் பொருள்களை வாங்க மக்கள் அதிகளவில் ஆர்வம் காட்டுவார்கள் என்பதால் அமேசான், பிளிப்கார்ட் ஆகிய தளங்கள் பல அதிரடி ஆஃபர்களை வழங்குவது வழக்கம்.
அதேபோல டெலிவரி உள்ளிட்ட மற்ற விநியோகச் சங்கிலி தொடர்பான துறைகளிலும் பல ஆயிரம் தற்காலிக வேலைவாய்ப்புகள் இந்தக் காலகட்டத்தில் உருவாக்கப்படும். பிளிப்கார்ட்டின் முக்கிய போட்டியாளரான அமேசான், கடந்தாண்டு பண்டிகை காலகட்டத்தில் சுமார் 1.4 லட்சம் தற்காலிக வேலைவாய்ப்புகளை உருவாக்கியது.
இந்நிலையில், இந்தாண்டு வரவிருக்கும் பண்டிகை காலங்களில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 70 ஆயிரம் வேலைவாய்ப்பை உருவாக்க உள்ளதாக பிளிப்கார்ட் நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. முன்னதாக, சிறு கடைகளுக்கு உதவும் வகையில் இம்மாத தொடக்கத்தில் குறிப்பிட்ட சில நகரங்களில் மொத்த விற்பனை முறையையும் பிளிப்கார்ட் நிறுவனம் அறிமுகம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 9 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பை தாண்டிய டிசிஎஸ்!