நஞ்சங்குட் தொழில்துறை பகுதியில் இயங்கிவரும் ஜூபிலண்ட் மருந்துத் தொழிற்சாலை, கரோனா வைரஸ் தொற்று பரவலால் கடுமையாக பாதிக்கப்பட்டு கடந்த மார்ச் 27ஆம் தேதி அன்று மூடப்பட்டது.
இந்தத் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த 1,458 தொழிலாளர்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், அவர்களில் 74 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
அம்மாநிலத்தில் பலரையும் இச்சம்பவம் பெரும் அச்சத்தில் ஆழ்த்திய நிலையில், தற்போது தொழிலாளர்கள் அனைவரும் பூரண குணமடைந்து தனிமைப்படுத்தும் மையங்களில் இருந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, ஜூபிலண்ட் தொழிற்சாலை மீண்டும் தன் பணிகளைத் தொடங்க அரசிடம் அனுமதி கோரி, முழு வீச்சில் ஆயத்தமாகிவருகிறது.
பணிகளை மீண்டும் தொடங்க, கடுமையான சமூக விலகலைப் பின்பற்றுதல், முகக்கவசங்களை கட்டாயமாக்குதல், நாள் ஒன்றுக்கு 50 சதவிகிதம் தொழிலாளர்கள் மட்டுமே இயங்குதல் என பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அத்தொழிற்சாலை மேற்கொள்ளவுள்ளது.
முன்னதாக ஜூபிலண்ட் தொழிற்சாலை கரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறி, நஞ்சங்கூட் பகுதி மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்திய நிலையில், அதனைப் போக்கும் வகையில், 10 கிராமங்களைத் தத்தெடுக்கவும், 50,000 உணவுப் பொட்டலங்களை வழங்கவும் அத்தொழிற்சாலை ஒப்புக்கொண்டுள்ளது.
இந்த ஒப்பந்தங்கள், நிபந்தனைகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அடுத்து, தொழிற்சாலையை மீண்டும் திறக்க கர்நாடக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதையும் படிங்க : ஊரடங்கு எதிரொலி : 450 ஊழியர்களை பணி நீக்கம் செய்த பெங்களூரு நிறுவனம்