இந்திய ஐவுளிக் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் நேற்று கோவையில் நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்தில் ஜவுளித்துறை சார்ந்த அனைத்து தொழில் அமைப்புகளும் பங்கேற்றன. பின்னர் இந்திய ஜவுளி கூட்டமைப்பின் தலைவர் ராஜ்குமார் செய்தியாளர்களிடம் பேசியபோது ஜவுளித்துறையில் உள்ள அனைத்து சங்கங்களுக்கும் என்ன தேவை என்பது குறித்து ஆலோசித்து, ஒரே மனுவாகக் கொண்டு வர மத்திய அரசு அறிவுறுத்தி இருப்பதாகவும் அதன் அடிப்படையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது எனவும் தெரிவித்தார். மேலும் பொதுவான கோரிக்கைகளை அடுத்த வாரம் மத்திய நிதியமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்த இருக்கின்றோம் எனவும் ராஜ்குமார் தெரிவித்தார்.
முக்கியமாக கடன் சீரமைப்பு உட்பட பல்வேறு கோரிக்கைகளை மத்திய நிதி அமைச்சரை சந்தித்து வலியுறுத்த இருக்கின்றோம் என தெரிவித்த அவர், அதேபோன்று 3 மாதங்களுக்கு ஒரு முறை ஜவுளித்துறை சார்ந்த அனைத்து அமைப்புகளும் ஒன்று கூடி விவாதிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது என ஜவுளி கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்தார்.
ஏற்றுமதி, உள்நாட்டு உற்பத்தி , ஜி.எஸ்.டி என தனித்தனியாக மூன்று முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தவும் துணி, நூல் ஏற்றுமதியை ஊக்குவிக்க சில சலுகைகளை மத்திய நிதியமைச்சர் இடம் கேட்கவுள்ளோம் எனவும் ராஜ்குமார் தெரிவித்தார் .
மேலும் ஒரு மெகாவாட்டிற்கு மேல் மின் நுகர்வு இருந்தால் மட்டுமே, கட்டணத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது உட்பட தமிழக மின்துறைத்துறை அமைச்சரை சந்தித்து சில கோரிக்கைகள் வைத்தோம்.
ஜவுளித்துறை முன்னேற்றம் சார்ந்த விஷயங்களில் பாஜகவைச் சேர்ந்த வானதி சீனிவாசன் ஆர்வம் காட்டுகின்றார் என்பதால், அவரை இந்தக் கூட்டத்திற்கு அழைத்து இருந்ததாகவும் அதில் வேறு எதுவும் காரணம் இல்லை எனவும் மேலும் ஏற்றுமதியை ஊக்குவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், வியட்நாமில் இருந்து நூல் சீனாவிற்கு அதிகளவு ஏற்றுமதி செய்யப்படுகின்ற நிலையில், இந்தியாவில் இருந்து வியட்நாமிற்கு நூல் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது எனவும் ராஜ்குமார் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கோவையில் ஒன்றுகூடும் இந்திய ஜவுளித் தொழில் கூட்டமைப்பினர்!