'கஃபே காபி டே' உரிமையாளர் வி.ஜி. சித்தார்த்தா 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் கர்நாடக மாநிலம் மங்களூருவுக்கு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
தற்கொலை செய்வதற்கு முன் அவர் எழுதிய கடிதத்தில், "கடன் வழங்கியவர்களிடமிருந்து எனக்கு கடுமையான அழுத்தம் வந்தது. வருமானவரித் துறையின் முன்னாள் டிஜிபி எங்கள் மைண்ட்ரீ பங்குகளைப் பெற்றார். இது நெருக்கடிக்கு வழிவகுத்தது" என்று தெரிவித்திருந்தார்.
சித்தார்த்தா மரணம் குறித்து 'கஃபே காபி டே' எண்டர்பிரைசஸ் லிமிடெட் (சிடிஇஎல்) நியமித்த குழு கடந்த ஓராண்டாக விசாரணை மேற்கொண்டுவந்தது. இந்நிலையில் அக்குழு சமர்பித்த அறிக்கையில், முதலீட்டாளர்களுக்கும் வருமானவரித் துறையினருக்கும் இந்தத் தற்கொலையில் எந்தத் தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளது.
மேலும், தனியார் முதலீட்டாளர்கள் மற்றும் பிற கடன் வழங்கியவர்களிடமிருந்து வந்த தொடர்ச்சியான நினைவூட்டல்களே சித்தார்த்தா தற்கொலை செய்ய தூண்டப்பட்டிருக்கலாம் என்றும் அறிக்கையில் கூறியுள்ளது.
ஆனால், இவை சாதாரண தொழில் நடைமுறைகளுக்கு அப்பாற்பட்டவை அல்ல என்றும், முதலீட்டாளர்கள் சட்ட மற்றும் வணிக விதிமுறைகளின்படி செயல்படுகிறார்கள் என்றும் அதில் தெரிவித்துள்ளது. மேலும், வருமானவரித் துறையால் அவர் துன்புறுத்தப்பட்டதற்கான எந்தவொரு ஆதாரமும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.
இருப்பினும், ஐடி துறையால் மைண்ட்ரீ பங்குகளை இணைத்ததால் 'கஃபே காபி டே' நிறுவனத்தின் பணப்புழக்கத்தில் நெருக்கடி எழுந்திருக்கக்கூடும் என்றும் அக்குழு கூறியுள்ளது.
இதையும் படிங்க: ஏன் சபாஹர் ரயில்வே திட்டத்தை இந்தியா கைவிட்டது?