2020-2021ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல்செய்து உரை நிகழ்த்திவருகிறார். இந்த மத்திய நிதிநிலை அறிக்கையில் கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீடு, புதிய அறிவிப்புகள் பலவற்றை நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார்.
அதில், 2030இல் உலகளவில் அதிக வேலையாட்களைக் கொண்ட நாடாக இந்தியா உருவெடுக்கும். கல்வியுடன் சேர்ந்து வேலைவாய்ப்பு, திறன் பயிற்சி இன்றைய இளைஞர்களுக்குத் தேவைப்படுகிறது. தரமான ஆசிரியர், உள்கட்டமைப்பு வசதிக்கு, நமது கல்வித் துறைக்கு சீரான நிதி ஒதுக்கீடுத் தேவைப்படும் என்றார்.
எனவே, 2020-21இல் கல்வித் துறைக்கு 99 ஆயிரத்து 300 கோடி ஒதுக்கீடுசெய்யப்படவுள்ளது எனவும் திறன் மேம்பாட்டுக்கு வரும் நிதியாண்டில் 3 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் இரண்டு லட்சம் பேரிடம் கல்விக்கொள்கை பற்றி கருத்துக் கேட்கப்பட்ட நிலையில், விரைவில் புதிய கல்விக்கொள்கை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், 'நாட்டில் மருத்துவர்களுக்கான பற்றாக்குறை அதிகரித்துள்ளது. இதைப் போக்கும்வகையில், நாடு முழுவதும் உள்ள மாவட்ட அரசு மருத்துவமணைகளில் மருத்துவக் கல்லூரி உருவாக்கப்படும். இந்தக் கல்லூரிகள் அரசு - தனியார் கூட்டு நடவடிக்கை மூலம் உருவாக்கப்பட்டு, மாநில அரசுக்கு சிறப்பு நிதிச்சலுகைகள் வழங்கப்படும்' என்றார்.
மேலும், 'இந்தியாவில் பல்வேறு வெளிநாட்டு மாணவர்கள் மேற்படிப்புக்காக வருவது அதிகரித்துவந்துள்ளது எனத் தெரிவித்த நிதிமைச்சர் ஆசிய, ஆப்ரிக்க மாணவர்கள் இந்தியாவில் பயிலத் தகுதித் தேர்வாக சாட் (SAT) தேர்வு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும்.
நகர்புற பகுதிகளில் புதிதாக பட்டம்பெற்ற பொறியியல் மாணவர்களுக்கு ஒராண்டு அப்ரென்டீஸ் பயிற்சி வழங்கப்படும் என அறிவித்துள்ள நிதியமைச்சர், ஒடுக்கப்பட்ட மாணவர்கள் பயில்வதற்கு வசதியாக ஆன்லைன் மூலம் பட்டப்படிப்புக்கான பயிற்சி அளிக்கப்படும்.
அத்துடன், காவல் துறை, சைபர் குற்றம் மற்றும் தடயவியல் பல்கலைக்கழகங்கள் புதிதாக உருவாக்கப்படும்.
உத்தரப் பிரதேசத்தில் காவல் துறை பல்கலைக்கழகம் அமைக்கப்படும்' என்ற அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: நிர்மலா சீதாராமன் மேற்கோள்காட்டிய ’பூமி திருத்தி உண்’ வரியின் விளக்கம்?