இந்தியாவின் உயிர்நாடியாகக் கிராமங்கள் திகழ்ந்து வருகின்றன. நகர்மயமாக்கல், நவீன மயமாக்கல் போன்ற நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருந்தாலும், இந்தியாவின் பெரும்பான்மையான மக்கள் தொகை இன்னும் கிராமங்களைச் சார்ந்தே உள்ளன. குறிப்பாக நாட்டின் வாழ்வாதாரம் மற்றும் வேலை வாய்ப்பு தற்போதும் விவசாயத்தைச் சார்ந்தே உள்ளன. நிதிநிலை அறிக்கை வரும் ஜூலை 5ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் விவசாயத் துறை, சில நிரந்தர தீர்வுகளை முக்கியமாக எதிர்பார்த்து காத்திருக்கிறது.
நீண்ட கால சிக்கல்கள்:
விவசாயப் பொருட்களுக்கு ஆதார விலை மிகக்குறைவாக உள்ளதும், விவசாய உற்பத்தி பொருட்களின் ஏற்றுமதி குறைந்து வருவதும் விவசாயத்துறை தற்போது சந்தித்து வரும் பெரிய பிரச்னையாக உள்ளன. இதன் காரணமாக லாபம் ஈட்ட முடியாமல் தொடர்ந்து நஷ்டத்தில் விவசாயத்துறை இயங்கி வருகிறது. விளைவு இடுபொருள் விலை, அடிப்படை ஆதார விலை நிர்ணயம் செய்வதில் சிக்கல், விவசாய வேலையாட்களுக்குக் கூலி வழங்குவதில் சிரமம், வங்கிக்கடன் பிரச்னை உள்ளிட்ட பல பிரச்னைகளை விவசாயத்துறை சந்தித்து வருகிறது. இப்படி ஆழமான சிக்கலை விவசாயத்துறை சந்தித்து வருவதால், 48 விழுக்காடு விவசாயக் குடும்பங்களைப் பாரம்பரிய விவசாயத் தொழிலில் தொடர்ந்து ஈடுபட விருப்பம் காட்டவில்லை என ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
தேவை நிரந்தரத் தீர்வுகள்:
விவசாயம் சார்ந்த மாற்றுக் கொள்கை முடிவை அரசாங்கம் விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும். முதற்கட்டமாக விவசாய உற்பத்தியை பெருக்கும் வகையில் புதிய தொழில்நுட்ப முறைகளை உருவாக்க வேண்டும். அத்துடன் விவசாயிகளுக்குக் கடன் தள்ளுபடியை மட்டும் மேற்கொள்வதைத் தவிர்த்து, உற்பத்தியை அதிகரிக்க ஏதுவாக மானியங்கள், தொழில்நுட்ப வசதிகளை அரசாங்கம் வழிவகை செய்ய வேண்டும். உற்பத்திக்குப் பின்னர் விவசாயிகள் உற்பத்தி பொருட்களுக்கான லாபத்தை ஈட்டும் வண்ணம் உணவு பதப்படுத்துதல், அவற்றை வணிக ஏற்றுமதிக்குக் கொண்டு சேர்த்தல் போன்றவற்றுக்கு தயார்ப்படுத்த வேண்டும்.
திட்டங்கள் விவசாயிகளுக்கு நேரடியாகப் பயன் அளிக்கும் வகையில் சென்று சேர, மத்திய மாநில அரசுகளுக்குள் சரியான ஒருங்கிணைப்பு இருக்க வேண்டும். இந்த அம்சங்களைப் பூர்த்தி செய்யும் நோக்கில் அரசாங்கம் நிதிநிலை அறிக்கையில் திட்டங்களை அறிவிக்க வேண்டும் என விவசாயத் துறை சார்ந்த நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.