மும்பை: இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளான பரோடா வங்கி, யூனியன் வங்கி ஆகியவை எம்.சி.எல்.ஆர். விகிதத்தினை கணிசமாகக் குறைத்துள்ளன.
பரோடா வங்கி 15 அடிப்படை புள்ளிகளைக் குறைத்து ஜூன் 12 ஆம் தேதிக்கு நடைமுறைப்படுத்தவுள்ளது. அதேபோல் யூனியன் வங்கி 10 அடிப்படை புள்ளிகளைக் குறைத்து ஜூன் 11 ஆம் தேதி முதல் அமல்படுத்தவுள்ளது.
முன்னதாக, பரோடா வங்கி 7.80 விழுக்காட்டிலிருந்து 7.65 விழுக்காடாக அடிப்படைப் புள்ளிகளைக் குறைத்திருந்தது. தற்போது அது 7.50 புள்ளிகளாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் யூனியன் வங்கி 7.70 விழுக்காட்டிலிருந்து 7.60 விழுக்காடாக அடிப்படைப் புள்ளிகளைக் குறைத்திருந்தது.
எஸ்பிஐ வங்கி, எம்.சி.எல்.ஆர். விகிதத்தில் 25 அடிப்படை புள்ளிகளைக் குறைத்துள்ள நிலையில், ஓராண்டுக்கான வட்டி விகிதமும் கணிசமான அளவு குறைந்துள்ளது. இது முன்னர் 7.25 விழுக்காடாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ரிசர்வ் வங்கியானது ரெபோ விகிதத்தினை குறைக்காவிட்டாலும், எஸ்பிஐ தனது வட்டி விகிதத்தினைக் குறைத்துள்ளது, அதன் வாடிக்கையாளர்களுக்கு மிகுந்த பயனளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் இதுவரை பயனர்கள் இருப்புத் தொகைக்குக் கிடைக்கும் வட்டி விகிதமும் குறையும் என்றும் கூறப்படுகிறது. ஒரு புறம் கடனுக்கான வட்டி விகிதம் குறைந்தாலும், வங்கியில் டெபாசிட் வைப்புகளுக்கு வட்டி குறைந்திருப்பது, வாடிக்கையாளர்களிடையே சற்று கவலையை ஏற்படுத்தியுள்ளது.