அஷோக் லேலாண்ட் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் பொறுப்பில் விபின் சோந்தி (Vipin Sondhi) நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன் அவர் ஜேசிபி நிறுவனத்தின் இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகள் பிரிவின் தலைமை செயல் அதிகாரியாக இருந்தார்.
கடந்த நவம்பர் மாதம் அஷோக் லேலாண்ட் நிறுவனத்தில் இணைந்த அவர், டாடா ஸ்டீல் நிறுவனம்(Tata Steel), ஸ்ரீராம் ஹோண்டா (Shriram Honda), ஜேசிபி உள்ளிட்ட நிறுவனங்களில் பல்வேறு முக்கியப் பொறுப்புககளில் பணியாற்றியுள்ளார்.
ஐஐடி டெல்லி பட்டதாரியான இவர் அஹமதாபாத் ஐஐஎம்-யில் மேலாண்மைப் படிப்பை முடித்துள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள விபின் சோந்தி, " நாட்டின் சிறந்த சரக்கு வாகன உற்பத்தி நிறுவனமாக அஷோக் லேலாண்ட் உள்ளது. மின்சாரப் பேருந்து உள்ளிட்ட பல்வேறு வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களை தானாக தயாரித்து, ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனங்களில் முன்னோடியாக உள்ளது. இந்நிறுவனத்தை உலகின் முதல் 10 சரக்கு, வாகன நிறுவனங்கள் பட்டியலில் கொண்டுவர பாடுபடுவேன் " என்றார்.
பொருளாதார மந்த நிலை காரணமாக, கடந்த சில நாட்களாக அஷோக் லேலாண்ட் நிறுவனம் கடும் சவால்களைச் சந்தித்து வருகிறது. உற்பத்தி குறைப்பு, ஆட்குறைப்பு போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நேரத்தில், அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி என்ற சவால் நிறைந்த பதவியில் அமர்ந்துள்ளார் விபின் சோந்தி என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அதிகரிக்கும் தேக்கநிலை: பின்வாங்கும் மத்திய நிதியமைச்சர்!