ரூபாய் நோட்டுகள் மூலம் கரோனா பரவும் என்று அச்சம் காரணமாக பெரும்பாலான மக்கள் டிஜிட்டல் முறையில் பணப் பரிமாற்றம் மேற்கொள்ளவே விரும்புகின்றனர். இந்நிலையில், உள்ளூர் கடைகளையும் ஸ்மார்ட் கடைகளாக மாற்றும் புதிய திட்டத்தை அமேசான் தற்போது அறிமுகப்படுத்தி உள்ளது.
இத்திட்டத்தில் உள்ளூர் கடைகளில் ஒட்டப்பட்டிருக்கும் QR codeஐ வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட்போன் மூலம் ஸ்கேன் செய்ய வேண்டும். அப்படி ஸ்கேன் செய்தால் கடையில் என்ன பொருள்கள் எல்லாம் இருக்கின்றன என்பதை, கடைக்குள் செல்லாமல் ஸ்மார்ட்போன் மூலமாக வாடிக்கையாளர்கள் தெரிந்து கொண்டு அவற்றை வாங்க முடியும்.
இது குறித்து அமேசான் பே நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் மகேந்திர நேருர்கர் கூறுகையில், "இந்தியாவிலுள்ள லட்சக்கணக்கான கடைகளில் ஏற்கனவே அமேசான் பே ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் உள்ளூர் கடைகளில் வாடிக்கையாளர்கள் பொருள்கள் வாங்குவதை பாதுகாப்பானதாகவும் வசதியானதாகவும் மாற்ற முயல்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இத்திட்டத்தில் இணைந்திருக்கும் கடைகளில் பொருள்களை வாங்கும் நுகர்வோர்கள், அவற்றை எளிதில் இஎம்ஐ ஆகவும் மாற்றிக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர உள்ளூர் கடைக்காரர்கள் அமேசான் கூப்பன்களை வழங்கியும் நுகர்வோர்களை ஈர்க்க முடியும் என்று அமேசான் பே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Amazon Pay Smart Stores என்று பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தில் ஏற்கனவே ஆயிரக்கணக்கான கடைகள் இணைந்துள்ளதாகவும், விரைவில் இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் என்றும் அமேசான் பே தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: 60 மடங்கு ஜூம் செய்யும் வசதியுடன் வெளியான ரியல்மி X3 SuperZoom