இந்தியாவில் கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே 17ஆம் தேதிவரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ள சூழ்நிலை உருவாகியுள்ளதால் இந்தியாவில் இணையப் பயன்பாடு 20 விழுக்காடு வரையும் கேளிக்கை மற்றும் கேமிங் செயலிகளின் பயன்பாடு 200 விழுக்காடு வரையும் அதிகரித்துள்ளது.
இந்தக் காலத்தில் பொதுமக்களைத் தங்கள் செயலியைப் பயன்படுத்த வைக்க பல்வேறு நிறுவனங்களும் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுவருகிறது.
இந்நிலையில், ஏர்டெல் செயலியை வைத்திருக்கும் அனைத்து சந்தாதாரர்களும் ஜீ5 நிறுவனத்தின் திரைப்படங்களையும், நிகழ்ச்சிகளையும் இலவசமாகப் பார்க்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஏர்டெல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ஏர்டெல் தேங்க்ஸ் திட்டத்தின் கீழ் ஜீ5 நிறுவனத்தின் ப்ரீமியம் உள்பட அனைத்து திரைப்படங்களையும் நிகழ்ச்சிகளையும் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் மே 4ஆம் தேதி முதல் ஜூலை 12ஆம் தேதிவரை இலவசமாகக் கண்டு ரசிக்கலாம்" என்று தெரிவித்துள்ளது.
ப்ரீபெய்ட், போஸ்ட்பெய்டு என அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இந்த இலவச சேவையைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் ஏர்டெல் தெளிவுபடுத்தியுள்ளது.
ஜீ5 நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "ஏர்டெல் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி. இதன் மூலம் நாட்டின் பல பகுதிகளிலுள்ள மக்களிடம் எங்களால் எளிதில் சென்று சேர முடியும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஊரடங்கால் அதிகரித்த ட்ரிம்மர் விற்பனை!